| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

தமிழ்நாடு ரோல் பால் ஸ்கேட்டிங் ஜூனியர் போட்டி திருச்சியில் துவங்கியது....!!!

by admin on | 2026-08-15 07:03 PM

Share:


தமிழ்நாடு ரோல் பால் ஸ்கேட்டிங்  ஜூனியர் போட்டி திருச்சியில் துவங்கியது....!!!

திருச்சியில் தமிழ்நாடு ரோல் பால் ஸ்கேட்டிங் ஜூனியர் போட்டி கோலாகல தொடக்கம்

31 மாவட்ட அணிகள் பங்கேற்பு – 45 லீக் போட்டிகள் – மூன்று நாட்கள் நடைபெறுகிறது

திருச்சி, ஆக.15:

திருச்சியில் தமிழ்நாடு ரோல் பால் ஸ்கேட்டிங் ஜூனியர் விளையாட்டுப் போட்டி நேற்று (ஆக.14) கோலாகலமாக தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 31 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி நேற்று தொடங்கி இன்று (ஆக.15), நாளை (ஆக.16) என மூன்று நாட்கள் நடைபெறுகிறது.


போட்டியை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஈஸ்வரி குழுமத்தின் தலைவர் சிவ சண்முகம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திருச்சி வேலம்மாள் பள்ளியின் முதல்வர் வித்தியா, தமிழ்நாடு ரோல் பால் ஸ்கேட்டிங் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கோவிந்தராஜ், மாநில துணைத் தலைவர்கள் சரவணன், பிரேம்நாத், பொருளாளர் ராஜசேகர், மாநில துணைச் செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள ரோல் பால் சங்கங்களின் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பயிற்சியாளர்களும் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற போட்டிகளில் மாணவர்கள் தங்களது மாவட்ட அணிகளுக்காக மிகுந்த உற்சாகத்துடன் விளையாடினர். மொத்தம் 45 போட்டிகளைக் கொண்ட லீக் சுற்றுகளாக நடைபெறும் இப்போட்டியில், முதல் நாளில் 25 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. ஒவ்வொரு போட்டியிலும் மாணவர்கள் வேகம், திறமை மற்றும் அணியாக இணைந்து செயல்படும் திறனை வெளிப்படுத்தினர்.


14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், மாணவர்கள் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கவர்ந்தனர். தங்களது மாவட்ட அணிக்காக வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்துடன் மாணவர்கள் கடுமையாகப் போராடி விளையாடினர்.

லீக் சுற்றுகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் அணிகளின் அடிப்படையில் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் நடைபெற உள்ளன. அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் தங்களது விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பான பயிற்சியும், போட்டி நுணுக்கங்களையும் வழங்கி, திறம்பட விளையாடுவதற்கு தயார்படுத்தி வருகின்றனர்.


சிறு வயதிலேயே மாணவ, மாணவிகளிடம் விளையாட்டின் மீதான ஆர்வத்தை உருவாக்குவதுடன், அவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வந்து எதிர்காலத்தில் சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்குவதற்கும் இப்போட்டி சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

இன்று நடைபெறும் போட்டிகளில் மகளிருக்கான ரோல் பால் ஸ்கேட்டிங் போட்டிகளும் இடம்பெறுகின்றன. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்று தங்களது விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment