by Vignesh Perumal on | 2025-08-01 08:18 PM
எழும்பூர் நீதிமன்றத்தில் காவல் பணி முடித்து புழல் சிறைக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, கொலை வழக்கில் கைதான சில கைதிகள் காவல்துறையினரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இந்தச் சம்பவத்தின் காணொலிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
காவல்துறையினரின் வாகனத்தில் சென்ற கைதிகள், திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டு காவலர்களைத் தாக்கினர். மேலும், "எங்களிடம் ஆட்கள் அதிகம் இருக்கிறார்கள், உங்களால் எதுவும் செய்ய முடியாது" என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. காவல்துறையினர் அவர்களைச் சமாதானப்படுத்தி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
நேற்றிரவு காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய கைதிகள், இன்று காலை புழல் சிறையின் கழிவறையில் வழுக்கி விழுந்ததில் கை மற்றும் கால்களில் முறிவு ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புழல் சிறையில் வைக்கப்பட்டிருந்த கைதிகள், இன்று காலை கழிவறைக்குச் சென்றபோது வழுக்கி விழுந்து காயமடைந்தனர். இதில், பலத்த காயமடைந்த அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
நேற்று நடந்த தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, இன்று கைதிகளுக்கு ஏற்பட்ட காயம் குறித்து காவல்துறையினரிடம் விசாரித்தபோது, இது ஒரு விபத்து என்றும், இதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை என்றும் தெரிவித்தனர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்