| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!

by Vignesh Perumal on | 2026-03-17 02:36 PM

Share:


ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலீஸ் காவலில் இருந்த வாலிபர் ஆகாஷ் உயிரிழந்த விவகாரத்தில், மானாமதுரை டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்குச் சிபிசிஐடி (CB-CID) போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளனர்.

மானாமதுரையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஆகாஷ், கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் காவலில் இருந்தபோது காயமடைந்து, சிகிச்சை பலனின்றி மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். காவல்துறையினர் அவரைத் தாக்கியதாலேயே இந்த மரணம் நிகழ்ந்ததாக அவரது குடும்பத்தினர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் தீவிரத்தைக் கருதி விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கைக் கையில் எடுத்துள்ள சிபிசிஐடி போலீசார், முதற்கட்டமாகச் சம்பவத்தின் போது பணியில் இருந்த மற்றும் தொடர்புடைய உயர் அதிகாரிகள் உட்பட 11 பேரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். 

ராஜா - மானாமதுரை டிஎஸ்பி (DSP), திலீபன் - ஆய்வாளர் (திருப்புவனம்), குமாரவேல்பாண்டியன் - ஆய்வாளர் (மானாமதுரை), குகன் - சார்பு ஆய்வாளர் (SI), தெய்வேந்திரன் - ஏட்டு, முத்துராஜா - மாவட்ட எஸ்பி தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர், முனீஸ்குமார் - தனிப்பிரிவு ஏட்டு, இருளப்பன் - போலீசார், காளீஸ்வரன் - போலீசார், மகேந்திரன் - போலீசார், முத்துப்பாண்டி - போலீசார் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சம்மன் அனுப்பப்பட்டுள்ள இந்த 11 பேரும் மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகாஷ் கைது செய்யப்பட்டது முதல் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது வரையிலான நிகழ்வுகள் குறித்து இவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட உள்ளது. 

மேலும், ஆகாஷ் பாலத்திலிருந்து குதித்துத் தப்பிக்க முயன்றபோது காயம் ஏற்பட்டதாகக் காவல்துறையினர் கூறிய விளக்கத்தின் உண்மைத்தன்மை குறித்தும், பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் சித்திரவதை நடந்ததா என்பது குறித்தும் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக ஆய்வு செய்ய உள்ளனர். 

ஒரே நேரத்தில் டிஎஸ்பி மற்றும் இரண்டு ஆய்வாளர்கள் உட்பட 11 போலீசாருக்குச் சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விசாரணையின் முடிவில் முக்கியத் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.









நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads
Recent News

Leave a Comment