by Vignesh Perumal on | 2026-07-31 11:40 AM
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே அஞ்சுவீடு அருவி வனப்பகுதியில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது. யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அந்த யானை உயிரிழந்தது உடற்கூறாய்வு பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனச்சரகத்திற்கு உட்பட்ட அஞ்சுவீடு அருவி அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியதைக் கவனித்த வனப்பணியாளர்கள், அப்பகுதிக்குச் சென்று தீவிரமாகத் தேடினர்.
அப்போது அங்கு சுமார் 20 வயது மதிக்கத்தக்கப் பெண் யானை ஒன்று உடல் அழுகிய நிலையில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். யானை இறந்து சில நாட்கள் ஆகியிருக்கலாம் எனக் கணிக்கப்பட்ட நிலையில், உடனடியாக இதுகுறித்து கொடைக்கானல் வனச்சரக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்த வனத்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து, அரசு கால்நடை மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டு, வனத்துறை விதிகளின்படி இறந்த பெண் யானையின் உடலுக்குச் சம்பவ இடத்திலேயே உடற்கூறாய்வு (Post-mortem) செய்யப்பட்டது.
உடற்கூறாய்வு முடிவுகள் குறித்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, "இறந்த பெண் யானையின் உடலில் பலத்த காயங்களும், எலும்பு முறிவுகளும் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. காட்டுப்பகுதியில் யானைக்கூட்டத்திற்கு இடையே அல்லது மற்றொரு யானையுடன் ஏற்பட்ட கடுமையான மோதலின் (yand fight) போது, பலத்த அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் எழுந்திருக்க முடியாமல், உணவு மற்றும் தண்ணீர் இன்றி அந்தப் பெண் யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது" என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வேட்டை அல்லது மின்சாரம் தாக்கி யானை இறக்கவில்லை; இயற்கை முறையிலான யானைகளின் மோதலிலேயே இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது என வனத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
உடற்கூறாய்வுப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வனத்துறை விதிகளின்படி அதே வனப்பகுதியிலேயே யானையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து கொடைக்கானல் வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளின் இல்லங்களில் மரக்கன்றுகள் நடவு....!!!!
திருப்பூர் கோபுரம் பவுண்டேஷன் அறக்கட்டளையின் சேவையை பாராட்டி கலெக்டர் நற்சான்று....!!!
தமிழ்நாடு ரோல் பால் ஸ்கேட்டிங் ஜூனியர் போட்டி திருச்சியில் துவங்கியது....!!!
தேனியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்....!!!"
சிவகங்கை கலெக்டர் தலைமையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்...!!! நலத்திட்ட உதவிகள் வழங்கல்...!!!