by Vignesh Perumal on | 2025-08-03 10:09 AM
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், ஐ. பெரியசாமியின் வெற்றி வித்தியாசத்தை விட அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சின்னாளப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தவெக நிர்வாகிகள் சார்பில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்களில், "ஆத்தூர் தொகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஐ.பெரியசாமி அவர்கள் பெற்ற 1,35,571 வாக்குகள் வித்தியாசத்தை விட ஒரு வாக்கு கூடுதலாகப் பெற்று, தவெக தலைவர் விஜய் அவர்கள் வெற்றி வாகை சூட வருக!!! வெல்க!!!" என்று வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், ஆத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றி சாதனை, தமிழக தேர்தல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், தற்போது புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், வருகிற தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போஸ்டர்கள், ஆத்தூர் தொகுதியில் விஜய் போட்டியிட வாய்ப்புள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் ஆத்தூர் தொகுதியில், ஐ.பெரியசாமியின் வெற்றி சாதனையை முறியடிப்பதில் தவெக-வினர் ஆர்வம் காட்டுவது, அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போஸ்டர்கள், வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆத்தூர் தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்பதற்கான அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்