by Vignesh Perumal on | 2026-03-19 02:47 PM
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதிக்குட்பட்ட வத்தலகுண்டு அருகே, உரிய ஆவணங்களின்றி வேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1,81,100 ரொக்கப் பணத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதைத் தடுக்க மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இன்று திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள கட்டகாமன்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஈச்சர் ரக வேன் ஒன்றை அதிகாரிகள் மறித்துச் சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் வந்த தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த குமரேசன் (54) என்பவரிடம் சோதனை நடத்தியபோது, அவரிடம் கட்டுக்கட்டாகப் பணம் இருப்பது கண்டறியப்பட்டது.
அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவரிடம் இருந்த ரூ.1,81,100 ரொக்கப் பணத்திற்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்பது தெரியவந்தது.
இது குறித்து குமரேசனிடம் கேட்டபோது, தான் ஒரு ஆட்டு வியாபாரி என்றும், ஆடுகள் வாங்குவதற்காக இந்தப் பணத்தைக் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார். இருப்பினும், தேர்தல் விதிமுறைப்படி ரூ.50,000-க்கு மேல் உரிய ஆதாரமின்றிப் பணம் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்பதால், அந்தப் பணத்தைப் பறக்கும் படையினர் முறைப்படி பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அதிகாரிகள் உடனடியாக நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அந்தப் பணம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய வியாபார ஆவணங்கள் அல்லது வங்கி ஆதாரங்களைச் சமர்ப்பித்து, மாவட்ட அளவிலான குழுவின் பரிசீலனைக்குப் பிறகு பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வத்தலகுண்டு பகுதியில் நடந்த இந்த அதிரடிப் பறிமுதல் சம்பவம் வியாபாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை..! அதிரடி உத்தரவு..!
பறக்கும் படை அதிரடி..! ஆட்டு வியாபாரியிடம் ரூ.1.81 லட்சம் பறிமுதல்...!
பழனியில் பயங்கரம்...! விவசாயி அடித்துக் கொலை...! தந்தை, மகன் உட்பட 3 பேர் அதிரடி கைது...!
கொடைக்கானல் மலைப்பாதையில் அட்டகாசம்...! வாகன ஓட்டிகள் கடும் பீதி...!
சட்டவிரோத மது விற்பனை...! 2 பேர் கைது...! 52 பாட்டில்கள் பறிமுதல்...!