| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

மலை கிராம மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்...!! இந்து எழுச்சி முன்னணி கோரிக்கை...!!!!

by admin on | 2026-07-28 07:34 PM

Share:


மலை கிராம மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்...!! இந்து எழுச்சி முன்னணி கோரிக்கை...!!!!

வருசநாடு மலைப்பகுதி மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கடமலைக்குண்டு–மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள வருசநாடு மலைப்பகுதியில், வண்டியூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். இலவம்பஞ்சு, முந்திரி, மிளகு, வாழைப்பழம், காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து, இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்ந்து வரும் இம்மக்கள், இன்று தங்கள் சொந்த மண்ணிலேயே அந்நியர்களாக மாற்றப்படும் அச்சத்தில் உள்ளனர்.

இப்பகுதியில் வசிக்கும் மக்கள் சமீப காலத்தில் குடியேறியவர்கள் அல்லர். வருசநாடு பகுதி உருவான காலம் முதல் தலைமுறை தலைமுறையாக இப்பகுதியிலேயே வாழ்ந்து, விவசாயத்தை நம்பி தங்களது வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இப்பகுதி வனத்துறைக்கு சொந்தமான நிலம் என்பதைக் காரணமாகக் கொண்டு, அங்கு வசிக்கும் மக்களை வெளியேற்ற வேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வனங்களைப் பாதுகாப்பது மிகவும் அவசியமானது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. அதே நேரத்தில், பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மக்களின் வாழ்வுரிமை, வாழ்வாதாரம் மற்றும் மனிதநேய உரிமைகளும் சம அளவில் பாதுகாக்கப்பட வேண்டியவை. பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் மக்களை திடீரென வெளியேற்றுவது நடைமுறையிலும் மனிதநேய அடிப்படையிலும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, தமிழக அரசு இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, தேவையானால் மேல்முறையீடு செய்து, போர்க்கால அடிப்படையில் நிரந்தரமான தீர்வை ஏற்படுத்த வேண்டும். வனத்துறைக்கு தேவையான நிலத்தை மாற்று இடத்தில் அரசு ஒதுக்கீடு செய்து, வருசநாடு மலைப்பகுதியில் தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மக்களின் குடியிருப்புகளையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முன்வர வேண்டும்.

மேலும், இப்பகுதியில் பல தலைமுறைகளாக வசித்து வரும் பூர்வகுடி மற்றும் பாரம்பரிய வனவாழ் மக்களின் உரிமைகள் குறித்து உரிய சட்டங்களின் அடிப்படையில் ஆய்வு செய்து, தகுதியுடையவர்களுக்கு பட்டா வழங்கி, அவர்களின் வாழ்வுரிமையை சட்டரீதியாக உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருசநாடு மலைப்பகுதி மக்கள் விளைவிக்கும் வாழைப்பழம், காய்கறிகள் மற்றும் பல்வேறு விவசாயப் பொருட்கள் தேனி மாவட்ட மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றுகின்றன. எனவே, இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது அவர்களை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தேனி மாவட்டத்தின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்பதை அரசும் சம்பந்தப்பட்ட துறைகளும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வருசநாடு மலைப்பகுதி மக்களின் நியாயமான உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் நோக்கில், அவர்கள் முன்னெடுக்கும் ஜனநாயக வழிப் போராட்டங்களுக்கு இந்து எழுச்சி முன்னணி – தேனி மாவட்டம் முழு ஆதரவையும் ஒற்றுமையையும் தெரிவித்து, அவர்களுடன் இணைந்து போராடத் தயாராக இருப்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறது.


இந்து எழுச்சி முன்னணி – தேனி மாவட்டம்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment