by admin on | 2026-07-21 07:54 PM
அரசு நிர்வாகத்திறனில் வெற்றி பெறுவாரா விஜய்...?
-மா.பாண்டியராஜ்.
அரசின் மிகப் பெரிய வெற்றி, "லஞ்சம் கொடுக்காதீர்கள்" என்று மக்களிடம் வேண்டுகோள் விடுப்பது அல்ல; "லஞ்சம் கொடுக்க முடியாத நிர்வாக அமைப்பை" உருவாக்குவது தான்.
‘‘அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால், தராதீர்கள். என் தம்பி விஜய் ஆட்சி, என் அண்ணன் விஜய் ஆட்சி, என் மகன் விஜய் ஆட்சி நான் ஏன் லஞ்சம் தர வேண்டும்’’ என கேளுங்கள் என்று முதல்வர் விஜய் பேசினார். இதற்கு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், உண்மையிலேயே லஞ்சம் கொடுக்க முடியாத அளவுக்கு ஒரு வலுவான நிர்வாக அமைப்பினை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.
இது பற்றி சமூக வலைதளங்களில் வெளிவந்த முக்கியமான ஒரு பதிவினை பார்க்கலாம்.
சமீபத்தில் கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர், "அரசு அலுவலர்கள் லஞ்சம் வாங்கினால் கொடுக்க முடியாது என்று சொல்லுங்கள்" என்று பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்தக் கருத்தின் நோக்கம் பாராட்டத்தக்கது. ஊழலுக்கு எதிராக மக்கள் துணிச்சலுடன் நிற்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால், ஒரு நல்ல நிர்வாகத்தின் வெற்றி, மக்கள் துணிச்சலாக "இல்லை" என்று சொல்ல வேண்டிய நிலையை உருவாக்குவதில் இல்லை. அப்படி சொல்ல வேண்டிய அவசியமே இல்லாத நிர்வாக அமைப்பை உருவாக்குவதில் தான் இருக்கிறது.
அரசின் மிகப் பெரிய வெற்றி, "லஞ்சம் கொடுக்காதீர்கள்" என்று மக்களிடம் வேண்டுகோள் விடுப்பது அல்ல; "லஞ்சம் கொடுக்க முடியாத நிர்வாக அமைப்பை" உருவாக்குவது தான்.
ஒரு குடிமகன் பல நாட்கள் அரசு அலுவலகத்திற்கு அலைந்து திரிகிறார். அவரது கோப்பு எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. யார் கையொப்பமிட வேண்டும் என்று தெரியவில்லை. எப்போது வேலை முடியும் என்பதும் தெரியவில்லை.
இந்த நிச்சயமற்ற சூழலில் தான் சிலர், "வேலையை சீக்கிரம் முடித்துத் தருகிறேன்" என்று கூறி லஞ்சம் கேட்கும் வாய்ப்பு உருவாகிறது. எனவே, ஊழலின் அடிப்படை காரணம் எல்லா நேரங்களிலும் ஒரு தனிநபரின் ஒழுக்கக் குறைபாடு மட்டுமல்ல. வெளிப்படைத்தன்மை இல்லாத நிர்வாக அமைப்பும் கூட.
இந்தியாவில் பல மாநிலங்கள் இந்தப் பிரச்சினைக்கு அமைப்பு ரீதியான தீர்வைத் தேர்ந்தெடுத்துள்ளன. மத்தியப் பிரதேசம், பீகார், டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹிமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா போன்ற மாநிலங்கள் Right to Public Services Act அல்லது Guaranteed Delivery of Public Services Act என்ற சட்டங்களை இயற்றியுள்ளன.
இந்தச் சட்டங்களின் நோக்கம் எளிமையானது. அரசுச் சேவைகள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வழங்கப்பட வேண்டும். காரணமின்றி தாமதம் ஏற்பட்டால் அதிகாரி பொறுப்பேற்க வேண்டும். சில மாநிலங்களில் நிர்வாக அபராதமும் விதிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு மேல்முறையீட்டு உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. இது ஊழலை ஒழிப்பதற்கான அமைப்பு ரீதியான அணுகுமுறை.
தமிழ்நாட்டில் பல துறைகளில் குடிமக்கள் சாசனம் (Citizen's Charter) நடைமுறையில் உள்ளது. சில சேவைகளுக்கு காலக்கெடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை முழுமையான சட்டப் பாதுகாப்புடன் இயங்குவதில்லை. அனைத்து அரசு சேவைகளுக்கும் பொருந்தும் சட்டப்பூர்வ காலக்கெடு, காரணமற்ற தாமதத்திற்கு அதிகாரியின் தனிப்பட்ட Accountability, நிர்வாக அபராதம், Independent மேல்முறையீட்டு அமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் முழுமையான "பொது சேவை உரிமைச் சட்டம்" தமிழ்நாட்டில் இதுவரை இல்லை.
தமிழ்நாடு இந்த அனுபவங்களை ஆய்வு செய்து, அதைவிட மேம்பட்ட ஒரு சட்டத்தை உருவாக்கலாம். அந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
ஒவ்வொரு அரசுச் சேவைக்கும் சட்டப்பூர்வ காலக்கெடு. காரணமற்ற தாமதத்திற்கு அதிகாரியின் Accountability. தேவையான இடங்களில் நிர்வாக அபராதம். Independent மேல்முறையீட்டு அமைப்பு. அனைத்து சேவைகளையும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்குதல்.
மனித தலையீட்டைக் குறைத்தல். ஒவ்வொரு கோப்பின் நிலையையும் பொதுமக்கள் நேரடியாக அறியும் வசதி. ஒவ்வொரு நடவடிக்கைக்கும் டிஜிட்டல் பதிவேடு (Digital Audit Trail). ஒரு குடிமகன் தனது விண்ணப்பத்தை கைப்பேசியிலேயே சமர்ப்பிக்க முடிந்தால்... கோப்பு தற்போது எந்த அதிகாரியிடம் உள்ளது என்பதை நேரடியாகப் பார்க்க முடிந்தால்... எப்போது முடிக்க வேண்டும் என்பது முன்கூட்டியே தெரிந்தால்... தாமதம் ஏற்பட்டால் காரணம் தானாகப் பதிவு செய்யப்பட்டால்... அப்போது லஞ்சம் கேட்கும் வாய்ப்புகள் இயல்பாகவே குறையத் தொடங்கும். ஊழலை ஒழிப்பதில் மிகச் சிறந்த வழி, ஊழல் செய்யும் வாய்ப்புகளைக் குறைப்பதே. இத்தகைய சட்டத்தை அரசு அவசரமாக கொண்டு வரக் கூடாது. முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அனைத்து அரசு ஊழியர் சங்கங்கள், தலைமைச் செயலாளர், துறைச் செயலாளர்கள், தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள், சட்ட வல்லுநர்கள், நிர்வாக வல்லுநர்கள் ஆகியோருடன் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும்.
அதன் அடிப்படையில் ஒரு வெள்ளை அறிக்கை (White Paper) தயாரித்து, பொதுமக்களின் கருத்துகளையும் பெற்று இறுதி சட்டத்தை உருவாக்க வேண்டும். இதனால் அரசு ஊழியர்களின் நடைமுறைச் சிக்கல்களும், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளும் சமநிலைப்படுத்தப்படும். ஊழலை எதிர்ப்பதில் ஒழுக்கப் போதனைகளும் அவசியம். ஆனால், நிர்வாக அமைப்பைச் சீர்திருத்தும் சட்டங்களே நீண்டகால தீர்வை வழங்கும்.
"லஞ்சம் வாங்கினால் கொடுக்காதீர்கள்" என்று மக்களிடம் கூறுவது ஒரு நல்ல அறிவுரை. ஆனால், அதைவிட உயர்ந்த நிர்வாக இலக்கு என்னவென்றால் "ஒரு குடிமகன் 'லஞ்சம் கொடுக்க முடியாது' என்று சொல்ல வேண்டிய சூழ்நிலையே உருவாகாத வகையில், காலக்கெடுவும், முழுமையான டிஜிட்டல் வெளிப்படைத்தன்மையும், Accountability ம் கொண்ட நிர்வாக அமைப்பை உருவாக்குவது." அதுவே ஒரு உண்மையான லஞ்சம் இல்லாத அரசின் அடையாளம். இந்த பதிவு மிகவும் சிறப்பாக இருக்கிறது. இப்படி நடந்தால் நல்ல நிர்வாக சீர்த்திருத்தம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது.ஒரு வேளை அரசிடம் இதனை விட நல்ல திட்டங்கள் இருக்கலாம். நமக்கு தேவை லஞ்சம் கேட்காத ஒரு நல்ல நேர்மையான நிர்வாகம் தான் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !