| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

டெல்லி போட்ட ஸ்கெட்ச்! அதிர்ச்சியில் அறிவாலயம் !! நள்ளிரவில் மாற்றம் - பின்னணி என்ன?

by satheesh on | 2026-04-04 11:01 AM

Share:


டெல்லி போட்ட ஸ்கெட்ச்!  அதிர்ச்சியில் அறிவாலயம் !!  நள்ளிரவில் மாற்றம் - பின்னணி என்ன?

டெல்லி போட்ட ஸ்கெட்ச். எடப்பாடி மூவ்  இரவோடு இரவாக  மாறிய தமிழக டிஜிபி.. பககீர்  பின்னணி!

தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கடராமனை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றி உள்ளது பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. சட்டம் - ஒழுங்கு புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நள்ளிரவிலேயே பதவியேற்றார். தமிழக அரசியலில் இப்போது அனல் பறக்கும் விவாதம், பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் மாற்றப்பட்டு, சந்தீப் ராய் ரத்தோர் அந்த நாற்காலியில் அமரவைக்கப்பட்டதுதான். ஸ்டாலின் நினைத்தது ஒன்று  நடந்தது வேறு என அறிவாலய வட்டாரமே அதிர்ந்து போயிருக்கிறது. இந்த அதிரடி மாற்றத்தின் பின்னால் டெல்லியின் பவர் விளையாட்டும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் மூவ்களும் இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன.

ஸ்டாலினின் வெயிட்டிங் கேம்

கடந்த 2025 ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றபோதே, புதிய டிஜிபி நியமனம் நடந்திருக்க வேண்டும். ஆனால், முதல்வர் ஸ்டாலினோ தனக்கு நெருக்கமான, நம்பிக்கைக்குரிய ஒருவரை அந்தப் பதவியில் அமர்த்த விரும்பினார். அதன் விளைவாகவே ஜி. வெங்கடராமன் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். எட்டு மாதங்கள் ஓடிவிட்டன, தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், இவரே இருக்கட்டும்" என பிடிவாதம் காட்டியது தமிழக அரசு. இந்த தாமதத்திற்கு இன்னொரு காரணம் தமிழக அரசின் லிஸ்டை டெல்லி உள்துறை ஏற்கவில்லை. யுபிஎஸ்சி (UPSC) விதிமுறைகளின்படி மூன்று பெயர்களைப் பரிந்துரைத்து, அதில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையைத் தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தது தமிழக - மத்திய அரசு. தமிழக அரசின் லிஸ்டை மத்திய அரசு தொடர்ந்து நிராகரித்தது. தேர்தல் நேரத்தில் நமக்குச் சாதகமான ஒரு அதிகாரி கையில் சட்டம்-ஒழுங்கு இருப்பதுதான் பாதுகாப்பு என்பது ஆளுங்கட்சியின் கணக்காக இருந்தது.

டெல்லி - எடப்பாடி: கூட்டணி?

இங்குதான் ட்விஸ்ட் அரங்கேறியது. தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு பாரபட்சமாக இருப்பதாகப் புகார் வாசித்தார் எடப்பாடி பழனிசாமி. டெல்லிக்கு பறந்த ரகசியத் தகவல்களில், பொறுப்பு டிஜிபியை வைத்துக்கொண்டு ஆளுங்கட்சி தேர்தலைச் சந்திக்க திட்டமிடுகிறது என்கிற பாயிண்ட் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டது. அமித் ஷாவிடம் எடப்பாடி தரப்பு கொடுத்த அழுத்தமும், டெல்லி மேலிடம் போட்ட ஸ்கெட்ச்சும் 'அதிரடி' உத்தரவாக வந்து விழுந்தது. "விதிமுறைகளை மீறி எவ்வளவு காலம் பொறுப்பு அதிகாரியை வைத்திருப்பீர்கள்  என ஆணையம் சீறியதன் விளைவுதான் இந்த நள்ளிரவு மாற்றம்.

யார் இந்த சந்தீப் ராய் ரத்தோர்

புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள சந்தீப் ராய் ரத்தோர், சத்தமில்லாமல் வேலை பார்ப்பவர். 1992 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. 1998 கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளைப் பிடித்ததில் தொடங்கி, ஆவடி போலீஸ் கமிஷனர், சென்னை போலீஸ் கமிஷனர் எனப் பல முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். குறிப்பாக, சிபிசிஐடி எஸ்பியாக இருந்தபோது முத்திரை தாள் மோசடி வழக்கை இவர் கையாண்ட விதம் டெல்லி வரை பேசப்பட்டது.

சாதாரணமாக மறுநாள் காலை 11 மணிக்குத்தான் ரத்தோர் பொறுப்பேற்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் பிடி இறுகியதாலும், டெல்லியின் 'வாட்ச்' தீவிரமாக இருந்ததாலும், எந்த ரிஸ்க்கும் எடுக்க விரும்பாமல் நள்ளிரவிலேயே அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழக அரசின் பிடியை நழுவச் செய்து, தேர்தல் களத்தை தன் கட்டுக்குள் கொண்டுவர டெல்லி போட்ட மாஸ்டர் பிளான் இது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஏப்ரல் 23 வாக்குப்பதிவு, மே 4 ரிசல்ட் என நகரும் இந்தத் தேர்தல் களத்தில், புதிய டிஜிபியின் வரவு யாருக்குச் சாதகமாக அமையும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment