| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் அரசியல்

N D A கூட்டணியில் இணைகிறதா ?தே மு தி க !

by satheesh on | 2026-02-15 07:46 PM

Share:


N D A கூட்டணியில்  இணைகிறதா  ?தே மு தி க !

அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்க்க பேச்சுவார்த்தை தீவிரம்- பிரதமர் மோடி கூட்டத்தில் பிரேமலதா பங்கேற்பாரா? தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத தொடக்கத்திலோ வெளியாக உள்ளது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஒரு அணியும் அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வரும் நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தனித்து களமிறங்குகிறார்கள். இதனால் சட்டமன்ற தேர்தலில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தி.மு.க. பம்பரமாக சுழன்று வருகிறது. அதே நேரத்தில் தி.மு.க.வை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அ.தி.மு.க.வும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., அன்புமணி தலைமையிலான பா.ம.க., டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க., ஜி.கே.வாசனின் த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் பல சிறிய கட்சிகளும் இந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த தே.மு.தி.க. தற்போது எந்தக் கூட்டணியிலும் இல்லை என்கிற அறிவிப்பை வெளியிட்டு விட்டு யாருடன் கூட்டணி அமைப்பது என்று ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக தி.மு.க. அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடன் தே.மு.தி.க. திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. இந்த முறை தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று தே.மு.தி.க. தேர்தலை சந்திக்க தயாராகி விட்டதாகவும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முக்கிய திருப்பமாக தே.மு.தி.க.வை தங்களது கூட்டணியில் எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியும் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர்கள் மற்றும் தே.மு.தி.க. தலைவர்கள் ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சு நடத்தி இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமிழகத்தில் ஏற்கனவே சுற்றுப்பயணம் செய்துள்ள பிரதமர் மோடி சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த நிலையில் வருகிற மார்ச் 1-ந்தேதி மதுரையில் பிரதமர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு பாரதிய ஜனதா ஏற்பாடு செய்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டமாக நடத்தப்படும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள். இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாவையும் ஒன்றாக மேடை ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவே பா.ஜனதா-தே.மு.தி.க. இடையே பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டுள்ளன. இந்த பேச்சுவார்த்தையை இன்னும் சில தினங்களில் முடித்து அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுவதை உறுதி செய்துவிட வேண்டும் என்று மத்திய மந்திரி அமித்ஷா தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம் அறிவுறுத்தி உள்ளார். கடந்த முறை மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரதமரின் பொதுக்கூட்டத்திலேயே தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் இறுதி செய்யப்படாததால் பிரேமலதா அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதுபோன்ற சூழலில் தான் இன்னும் 2 வாரத்தில் மீண்டும் பிரதமர் தமிழகம் வர இருக்கிறார். அதற்குள் தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தையை உறுதி செய்து தங்களது கூட்டணியில் அந்தக் கட்சி இருப்பதை எப்படியாவது உறுதி செய்து விட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர்களும் தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி பா.ஜனதா நிர்வாகி ஒருவர் கூறும் போது, வருகிற சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் தே.மு.தி.க. ஜனநாயக கூட்டணியிலேயே இடம்பெறும் என்று நம்புவதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் விரைவில் முடிவடையும் என்றும் தெரிவித்துள்ளார்.

இணை ஆசிரியர்  : N. சதீஷ்குமார்,  பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment