| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

விசிலுக்கு தடை...! தீயாக பரவும் செய்தி...! திகைத்து போன ரசிகர்கள்...!

by Vignesh Perumal on | 2026-02-08 04:49 PM

Share:


விசிலுக்கு தடை...! தீயாக பரவும் செய்தி...! திகைத்து போன ரசிகர்கள்...!

இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 டி20 உலகக் கோப்பை தொடரில், சென்னையில் நடைபெற்ற நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் "விசில்" கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானம் என்றாலே 'விசில் போடு' என்ற முழக்கமும், ரசிகர்களின் விசில் சத்தமும்தான் அடையாளமாக இருந்து வருகிறது. ஆனால், இன்று நடைபெற்ற போட்டியில் விசிலுக்குத் தடை விதிக்கப்பட்டது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் சின்னமாக அண்மையில் "விசில்" அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாகவே, அரசியல் காரணங்களுக்காக மைதானத்திற்குள் விசில் கொண்டு செல்ல காவல்துறை தடை விதித்திருக்கலாம் எனச் சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.

ஐசிசி (ICC) அல்லது பிசிசிஐ (BCCI) விதிகளில் விசிலுக்குத் தடை என எதுவும் குறிப்பிடப்படவில்லை. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) வெளியிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் பட்டியலிலும் விசில் இடம் பெறவில்லை. இருப்பினும், பாதுகாப்பு மற்றும் உள்ளூர் நிர்வாகக் காரணங்களால் இந்தத் தடை அமல்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வழக்கமான பாதுகாப்பு விதிமுறைகளின்படி, பல பொருட்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தண்ணீர் பாட்டில்கள், மதுபானம் மற்றும் சிகரெட். லேப்டாப், டிரோன்கள், பவர் பேங்க் மற்றும் டிஜிட்டல் கேமராக்கள். பெரிய பைகள், குடை மற்றும் ஹெல்மெட்கள் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

விசில் சத்தம் குறைந்திருந்தாலும், மைதானத்தில் ஆட்டம் அனல் பறந்தது. 2026 உலகக் கோப்பைத் தொடரின் 4-வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, குல்பதின் நைப் (63 அதிரடியால் 20 ஓவர்களில் 182/6 ரன்கள் எடுத்தது.

183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி, டிம் சீஃபர்ட்டின் (65) சிறப்பான ஆட்டத்தால் 17.5 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

சிஎஸ்கே (CSK) போட்டிகளின் போது விசிலே பிரதானமாக இருக்கும் நிலையில், சர்வதேசப் போட்டியில் இதற்குத் தடை விதித்தது கிரிக்கெட் ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது. "விசில் சத்தம் இல்லாத சேப்பாக்கம் மைதானம் களையிழந்து காணப்பட்டது" என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.








நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment