| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

ஆர் விஜஆர் கேள்வி பதில்கள்....!!!

by admin on | 2026-02-08 12:15 PM

Share:


ஆர் விஜஆர் கேள்வி பதில்கள்....!!!

*கேள்வி-பதில்*

-- ஆர். வி. ஆர்

Blog: https://rvr-india.blogspot.com


*1. கேள்வி:* கமல் ஹாசன் ராஜ்ய சபாவில் முதன் முதலாகத் தமிழில் பேசியதை டி.வி-யில் பார்த்தீர்களா? புரிந்ததா?


*பதில்:* அவர் தமிழில் பேசி முடித்தவுடன் சொன்ன முக்கியமான இரண்டு ஹிந்தி சொற்கள் மட்டும் புரிந்தன. ஜெய் ஹிந்த்!


ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பவர் தனது எண்ணங்களை நேராக, சாதாரண வார்த்தைகளில் பேசுவது நல்லது. கமல் ஹாசன் வார்த்தைகளை, அதுவும் அலங்கார வார்த்தைகளை, வைத்து சர்க்கஸ் காட்டுகிறார். 


கமல் ராஜ்ய சபாவில் "தமிழ் பிச்சை எடுக்கக் கூட உதவாதா?" என்ற தொடக்கத்துடன் வார்த்தை சர்க்கஸ் செய்தபோது, கை எங்கு போகிறது, கால் எங்கு போகிறது என்று புரியாமல் விழுந்து புரண்டு கோமாளியாகக் காட்சி கொடுத்தார். அதுவும் நல்ல சர்க்கஸ் வித்தை என்று நினைத்துக் கொண்டார். பாவமாக இருக்கிறது.


                              *****


*2. கேள்வி:* "ஓட்டையும் நாட்டையும் இந்தக் கமல் ஹாசன் விற்கவே மாட்டான்" என்று ராஜ்ய சபாவில் கமல் ஹாசன் மார்தட்டிச் சொன்னார். அவர் பேச்சுக்கு என்ன அர்த்தம்?


*பதில்:* ஏதோ ரைமிங்காகப் பேச ஆசைப்படுகிறார். வேறொன்றுமில்லை.


ஒரு கட்சி, சாதாரண மக்களின் ஓட்டுகளைப் பலவாறாக விலைகொடுத்து வாங்குகிறது. அந்தக் கட்சிக்குத் தன் கட்சியையே அடமானம் வைத்திருக்கிறார் கமல் ஹாசன். பிறகு இவர் தனது ஒரு ஓட்டை விற்பது, விற்காதது என்ற பேச்சுக்கே இடமில்லை. இதுபோக, அன்றாடங்காய்ச்சி மக்கள் ஆயிரம், ரண்டாயிரம் என்று வாங்கிக்கொண்டு ஒரு கட்சிக்கு ஓட்டுப்போட சம்மதிக்கலாம். அதுதான் ஓட்டை விற்பது என்று அர்த்தம். செல்வந்தர் கமல் ஹாசன் அதைச் செய்யவில்லை என்பது ஒரு பெருமையா?


'நாட்டை விற்பது' என்றால், மத்தியில் ஆளுகின்றவர்கள் தமது சுய லாபத்துக்காக அல்லது அறியாமையால் பிரதிபலன் இன்றி அந்நிய நாட்டுக்கு அதீத வணிகச் சலுகைகள் வழங்குவது, இந்திய நிலப் பரப்பை விட்டுக் கொடுப்பது, அந்தச் செயல்கள் நம் நாட்டைப் பெரிதும் பாதிப்பது என்று அர்த்தம். மத்திய ஆட்சியில் கமல் ஹாசனுக்குத் துளியும் பங்கில்லை. நாட்டை விற்கும் நிலையில் அவர் இல்லை. இல்லாத ஊருக்குப் போகமாட்டேன் என்று ஒருவர் பேசுவது பெருமையா?


                             *****


*3. கேள்வி:* திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு அது நிறைவேற்றப்படாத நிலையில் எழுந்த கோர்ட் அவமதிப்பு வழக்கில், "மத மோதல்கள் ஏற்படும் சூழல் இருந்ததாகத் தகவல் வந்ததால், அப்போதைய சூழலைக் கருதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவை மீறவேண்டும் என்ற எண்ணம் இல்லை" என்று கலெக்டர் பதில் மனு தாக்கல் செய்திருக்கிறார். வாதம் சமர்ப்பித்த தமிழக அரசு சீனியர் வக்கீல் கிரி, "ஹிந்து முஸ்லிம்களுக்கு இடையே பிரச்னை ஏற்படாமல் தவிர்க்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்று கோர்ட்டில் விளக்கம் சொன்னார். இந்த விளக்கங்கள் சரியா?


*பதில்:* கோர்ட் அவமதிப்பு நடந்தது என்று கோர்ட் தீர்மானித்தால், அவமதிப்பு செய்தவருக்குச் சலுகை காட்டுவதா அல்லது அவரை தண்டிப்பதா என்பது வழக்கை விசாரிக்கும் கோர்ட்டைப் பொறுத்தது. இது ஒரு பக்கம்.


இன்னொரு பக்கம்: கோர்ட் உத்தரவின்படி தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டால், அது தொடர்பாக யார் யாரை எதிர்த்து மதமோதல்கள் செய்வார்கள் என்று தமிழக அரசு கோர்ட்டில் சொல்கிறது? முஸ்லிம்கள் ஹிந்துக்களுக்கு எதிராக அவ்வாறு செய்வார்கள் என்று தகவல் வந்தது, அதை அரசும் நம்பியது, என்று அரசு பதில் மனுவாகக் கோர்ட்டில் சொன்னதாக அர்த்தமாகும்.


சென்ற மாதம் கும்பகோணத்தில் இஸ்லாமியர்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "இஸ்லாமியர்களான நீங்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறீர்கள். திமுக-தான் சிறுபான்மையின மக்களைக் காக்கும் காவல் அரண்" என்று பேசி, ஹிந்துக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக அச்சுறுத்தல் செய்யலாம், அந்த நிலையில் திமுக முஸ்லிம்களைக் காக்கும் என மறைமுகமாக ஹிந்துக்களைப் பழித்தார்.


கோர்ட்டில், ஹிந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்கள் அக்கிரமம், அடாவடி செய்யலாம் என்று சொல்ல வருவது; பொதுமேடையில், முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துக்கள் அக்கிரமம், அடாவடி செய்யலாம் என்று சொல்ல வருவது. இந்த இரட்டை வேடத்தின் பெயர், ஸ்டாலின் மாடல் ஆட்சி.


                             *****

 

*4. கேள்வி:* வரும் சட்டசபைத் தேர்தலுக்காக அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்குறுதிகளில், 'மாணவர்களின் வங்கிக் கடன் ரத்து செய்யப்பட்டு அதை  அரசு ஏற்கும்,' 'குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு மூன்று கேஸ் சிலிண்டர்கள் இலவசம்,' 'ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்குப் பத்து லட்சம் ரூபாய்' என்று பல சலுகைகள் இடம் பெறுகின்றன. இவை மக்கள் நலன் சார்ந்தவையா?


*பதில்:* வேகமான தொழில்துறை முன்னேற்றம், வேலை வாய்ப்பு அதிகரிப்பு,  பல்லிளிக்காத சாலைகள், வீடுகளுக்குச் சுத்தமான குடிநீர் இணைப்பு, லஞ்ச ஊழல் தாண்டவம் ஆடாத நிர்வாகம், இவற்றை உறுதி செய்யமுடியாத எந்தக் கட்சியும் கடன் ரத்து மற்றும் இலவசங்களை அறிவித்தால், அவர்கள் என்னவோ துண்டில் போட்டு ஏதோ செய்ய முனைகிறார்கள் என்று அர்த்தம். பார்க்க வேண்டும்.


                             *****


*5. கேள்வி:* முக்கிய காரியங்கள் நடப்பதற்குச் சிலர் குட்டிக்கரணம் போட்டு முயன்றாலும் அது நடப்பதில்லை. அவர்கள் என்ன செய்யலாம்?   


*பதில்:* தோப்புக் கரணம் போடலாம்.


                             *****


பகுதி 47

06.02.2026


                             --------


R. Veera Raghavan

Advocate, Chennai


Email: veera.rvr@gmail.com

Blog: https://rvr-india.blogspot.com

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment