by admin on | 2026-01-23 06:41 PM
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (23.01.2026) நடைபெற்றது. தேனி மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 829.80 மி.மீ ஆகும். ஜனவரி மாத இயல்பு மழையளவான 29.80 மி.மீ-க்கு தற்பொழுது வரை 35.36 மி.மீ மழை பெய்துள்ளது. இது ஜனவரி மாத இயல்பான மழை அளவை காட்டிலும் 5.56 மி.மீ அதிகமாகும்.
தேனி மாவட்டத்தில் நடப்பாண்டு நெல் 12,909 ஹெக்டரும், சிறுதானியம் 11,237 ஹெக்டரும், பயறு வகைகள் 7,122 ஹெக்டரும், எண்ணெய்வித்துகள் .1,764 ஹெக்டரும், பருத்தி 1,900 ஹெக்டரும், கரும்பு 1,960 ஹெக்டரும், தோட்டக்கலைத் துறை பயிர்களான பழப்பயிர்கள் 19,588 ஹெக்டரும், காய்கறி வகைப் பயிர்கள் 8,470 ஹெக்டரும், மலைத்தோட்ட பயிர்கள் 33,772 ஹெக்டரும், நறுமணப்பயிர்கள் 3,234 ஹெக்டரும், மலர்ப்பயிர்கள் 599 ஹெக்டர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் விதை 32.8 மெ.டன், சிறுதானியங்கள் 9 மெ.டன்னும் (கம்பு, சோளம்) பயறு வகை விதைகள் (தட்டை பயிறு, பாசிப்பயிறு மற்றும் உளுந்து) 16 மெ.டன்னும், எண்ணெய்வித்துப் பயிர் விதைகள் (நிலக்கடலை) 4.5 மெ.டன்னும், பருத்தி 0.718 டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்குத் தேவையான உரங்களான யூரியா 867 மெ.டன்னும் (MFL, Spic & IFFCO), DAP 712 மெ.டன்னும் (Green star, IPL & IFFCO) பொட்டாஷ் 719 மெ.டன் (IPL) மற்றும் கலப்பு உரங்கள் 3305 மெ.டன்னும் (Fact, GFL, CIL, IFFCO) தனியார் நிறுவனங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. வேளாண் அடுக்ககம் திட்டத்தில் வேளாண்மைத்துறை சார்ந்த அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஒவ்வொரு விவசாயிகளுக்கும் தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் PM Kisan நிதியினை தொடர்ந்து பெறும் 27,320 பயனாளிகளில் இதுவரை 22,503 விவசாயிகள் மட்டுமே பதிவுகள் மேற்கொண்டுள்ளனர். இன்னும் ஆண்டிபட்டி வட்டத்தில் 1591 விவசாயிகளும், போடிநாயக்கனூர் வட்டத்தில் 491 விவசாயிகளும், பெரியகுளம் வட்டத்தில் 1026 விவசாயிகளும், தேனி வட்டத்தில் 440 விவசாயிகளும், உத்தமபாளையம் வட்டத்தில் 1269 விவசாயிகள் என மொத்தம் 4,817 பயனாளிகள் அடையாள எண் பெறவில்லை. PM Kisan நிதியினை தொடர்ந்து பெற விரும்பும் விவசாயிகளும் உடனடியாக சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்கள் அல்லது பொது சேவை மையங்களை தொடர்பு கொண்டு பதிவுகள் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம்.வேளாண் கல்லூரி மாணவர்கள் மூலம் இ-நாம்-ல் விவசாய பொருட்களை விற்பனை செய்வது குறித்தும், அதன் மூலம் பொருளீட்டுக்கடன் பெறுவது மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை பயன்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு வரைபடம் மூலம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், தேனி மாவட்டத்தில் எண்ணெய்வித்து சாகுபடி குறைந்து வருவதால் விவசாயிகள் எண்ணெய்வித்து சாகுபடியை அதிகரித்திட வேளாண்மை இணை இயக்குநர் அவர்களால் விவசாயிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து வரப்பெற்ற மனுக்களுக்கு உரிய பதிலினை விவசாயிகளுக்கு வழங்கிட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.ராஜகுமார், துணை இயக்குநர், (ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) திரு.விவேக் பரஸ்நாத் யாதவ், இ.வ.ப., மாவட்ட வன அலுவலர் திரு.அருண்குமார், இ.வ.ப., உதவி வனப்பாதுகாவலர் திரு.சாய்சரண் ரெட்டி இ.வ.ப., இணை இயக்குநர் (வேளாண்மை) திருமதி சாந்தாமணி, இணைப்பதிவாளர் (கூட்டுறவுத்துறை) திருமதி நர்மதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி வளர்மதி, அனைத்துத் துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் மற்றும் ஏராளமான விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பயங்கர ஆயுதங்களுடன் இருவர் கைது.....!!!!!
போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க முயற்சி,...??? வாலிபர் தற்கொலை முயற்சி....!!!!
மிரட்டும் தனியார் நிதி நிறுவனம்,....??? தற்கொலை முயற்சி....!!"
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் மறியல் போராட்டம்.....!!!!
தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முறைகேடு தேனியில் ஆர்ப்பாட்டம்....!!!