by Vignesh Perumal on | 2026-01-22 02:35 PM
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பல ஆண்டுகளாக வசித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் நகரைச் சுற்றியுள்ள பின்வரும் பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். குறிப்பாக, சவேரியார்பாளையம், பர்மா காலனி, வேடப்பட்டி, சாமியார் தோட்டம், குரு நகர், வினோபாஜி நகர் இப்பகுதி மக்கள் தங்களுக்கு வசிப்பிடத்திற்கான முறையான இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என்று பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர். இருப்பினும், இதுவரை எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் தலைமையில், திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாபெரும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
அப்போது வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். "மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான நபர்கள் அனைவருக்கும் விரைவில் வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும்" என்று அதிகாரிகள் தரப்பில் அப்போது உறுதி அளிக்கப்பட்டது.
அதிகாரிகளின் இந்த உறுதிமொழியை ஏற்றுப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. ஆனால், பல மாதங்கள் கடந்தும் இன்னும் ஒருவருக்குக் கூட பட்டா வழங்கப்படவில்லை என்பது அப்பகுதி மக்களின் ஆதங்கமாக உள்ளது.
அதிகாரிகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், உடனடியாகப் பட்டா வழங்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் குழுவினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ஏற்கனவே நடத்திய பேச்சுவார்த்தையின் போது அளித்த வாக்குறுதியை அதிகாரிகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
தகுதியான நபர்களைக் கண்டறிந்து, எவ்வித தாமதமுமின்றி வீட்டு மனைப் பட்டாக்களை வழங்க வேண்டும்.
அரசு நிலங்களில் நீண்டகாலமாக வசிப்பவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியைக் கைவிட்டு, அவர்களை அங்கேயே வரன்முறைப்படுத்த வேண்டும்.
இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட நிர்வாகம், இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், பொதுமக்களைத் திரட்டி மீண்டும் மிகப்பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எச்சரித்துள்ளனர்.
செய்தி - மோகன் கணேஷ் திண்டுக்கல்
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
மாற்றுத்திறனாளிகள் போராட்டம் - திமுக அரசுக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம் !!
புதிய சகாப்தம்.., தாரிக் ரஹ்மான் பிரதமராகப் பதவியேற்பு; இடைக்கால அரசு கலைப்பு...!
தமிழக அரசியலில் திருப்புமுனை...! 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில்...!
பைக்குகளை சரக்கு வாகனங்களாக மாற்றினால் கடும் நடவடிக்கை ! போக்குவரத்து துறை கடும் எச்சரிக்கை !!
திண்டுக்கல்லில் பரபரப்பு..! காணாமல் போன முதியவர் பிணமாக மீட்பு..!