| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

பொதுச் சேவை - திருட்டுத் தொழில் - தட்டி தூக்கிய போலீஸ்.!

by satheesh on | 2026-01-29 05:24 PM

Share:


பொதுச் சேவை  - திருட்டுத் தொழில்  -  தட்டி தூக்கிய போலீஸ்.!

ரயிலில் செல்லும் பெண்கள் மீது குறி -அசந்து தூங்கும் நேரத்தில் அபேஸ் -  தட்டி  தூக்கிய போலீசார் ;

மதுரை - ரயில் நிலையத்தில் பெண்களுக்கு உதவுவது போல் நடித்து நகைப்பறிப்பில் ஈடுபட்டு வந்த நபர் போலீசார் விரித்த வலையில் வசமாக வந்து சிக்கியிருக்கிறார். பொதுச் சேவைன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும்" என காலரை தூக்கி விட்டுக்குகொண்டு ரயில் நிலையத்தில் ஒரு கதாநாயகனாக திரிந்து கொண்டிருந்த நபர் ஒரு ஜில்லா திருடன் என்பது கடைசியில் தான் தெரியவந்துள்ளது. திடீர் நல்லவனாக மாறி ரயில் பயணிகளுக்கு சேவை செய்து வந்த நபர், அசந்த நேரத்தில் செயின்பறிப்பில் ஈடுபட்டு செல்வசெழிப்புடன் வாழ்ந்து வந்திருக்கிறார். உதவி என்கிற பெயரில் பெண்கள் அணிந்திருக்கும் நகைகளை உருவிச் சென்ற நபர் போலீஸ் விரித்த வலையில் சிக்கியது எப்படி? கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் பகுதியைச் சேர்ந்த 38 வயதான கார்த்திக். மதுரை ரயில்வே ஸ்டேஷனில் ரயில் பயணிகளுக்கு அவர் செய்து வந்த சேவையைப் பார்த்தால், ஆஹா "இப்படி ஒரு பையன் இருப்பதால் தான் மதுரையில் மழையே பெய்கிறது" என சொல்லத் தோன்றும். ரயில் பயணிகளிடம், அதிலும் குறிப்பாக வயதான பெண் பயணிகளிடம் சென்று பேச்சுக் கொடுத்து நட்பாக பழகும் இவர், நான் இருக்கேன் வாங்க,, என உரிமையோடு லக்கேஜ்ஜுகளை தூக்கிக் கொண்டு ரயிலுக்குள் சென்று உட்காருவதற்கு இடம் பிடித்துக் கொடுப்பார். 


வயதான பெண்களைப் பார்த்து விட்டால் போதும், தாய்குலத்திற்கு சேவை செய்வதில் தமிழ்ப்பட கதாநாயகன்களை இரண்டாம் இடத்திற்கு தள்ளி விடுவார் இந்த கார்த்திக். வாங்க பாட்டி.. உங்களுக்கு இந்த பேரன் இருக்கிறான் என கையைப் பிடித்து முன் பதிவு அல்லாத பெட்டிக்கு அழைத்துச் சென்று ஏற்கெனவே உட்கார்ந்திருக்கும் நபர்களை அதட்டி எழுப்பி விட்டு இருக்கையில் அமர வைத்து விடுவார். அந்த மூதாட்டிகளும், எந்த புண்ணியவதி பெற்ற பிள்ளையோ? என மனதார வாழ்த்துவார்கள். இப்படி ஒரு கும்பலை ஒரே பெட்டியில் ஏற்றிய பிறகு தான் கார்த்திக்கின் உண்மையான அவதாரம் வெளிச்சத்துக்கு வரும். ரயில் கிளம்பி 2 மணிநேரம் கழித்துதான் தனது வேலையைக் காட்டுவார் அந்த கார்த்திக். அனைவரும் லேசான உறக்கத்திற்கு சென்றதும் அலர்ட் ஆகும் கார்த்திக் ஒவ்வொரு மூதாட்டியாக சென்று நைசாக நகைகளை உருவி பாக்கெட்டில் சொருகிக் கொள்வார். ஒரு மணிநேரத்தில் பெண்கள் மற்றும் மூதாட்டிகளிடம் தனது கைவரிசையை காட்டி விட்டு அடுத்த ஸ்டேஷனில் ஜகா வாங்கி விடுவார் இந்த ஜகஜாலக் கில்லாடி. பின்னர் திருட்டு நகைகளை திண்டுக்கல் மாவட்டம் துள்ளிபட்டிக்கு கொண்டு சென்று அங்கு ஆசாரியாக இருக்கும் பிரபாகரனிடம் கொடுத்து பணமாக மாற்றி சுகபோகமாக  வாழ்ந்து வந்திருக்கிறார் கார்த்திக். தூக்கத்திலிருந்து எழுந்திருக்கும் பெண்கள் அனைவரும் நகைகளைக் காணாமல் ஒரே நேரத்தில் கூச்சலிட அப்போது தான் அந்த தம்பி என்னும் தங்கக் கம்பி திருடி விட்டு கம்பி நீட்டிய சம்பவம் புரியவந்திருக்கிறது. ரயில் பயணிகள் மொத்தமாக சென்று ரயில்வே போலீசாரிடம் புகார் அளிக்க, ஏற்கெனவே இதுபோன்று ஏராளமான புகார்கள் வந்திருப்பது அப்போது தான் அவர்களுக்கே தெரியவந்துள்ளது. இதற்குமேல் திருடனை விட்டு வைக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்த ரயில்வே போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணையைத் தீவிரப்படுத்தினர். நீண்ட ஆய்வுக்குப் பின் தான் கடலூரை சேர்ந்த கார்த்திக்கின் நடமாட்டம் சந்தேகத்துக்குரிய வகையில் இருப்பது தெரியவந்துள்ளது. அனைத்து ரயில் நிலையங்களிலும் வலைவிரித்து காத்திருந்த போலீசாரிடம் வசமாக வந்து சிக்கிக் கொண்டார் கார்த்திக். அவரிடம் நடத்திய விசாரணையில் உதவுவது போல் நடித்து நகை மற்றும் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார். கார்த்திக் மற்றும் அவருக்கு உதவியாக நகைகளை வாங்கி விற்பனை செய்துவந்த பிரபாகரன் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பொதுச்சேவைன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் என புருடாவிட்டு செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த நபர் சிக்கியிருப்பதால் ரயில் பயணிகள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

இணை ஆசிரியர்  ; N .சதீஷ்குமார் ,பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment