| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

குடும்பமே கொலை - தமிழகத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் - நண்பர்களே அரங்கேற்றிய கொடூரம் !

by satheesh on | 2026-01-29 02:08 PM

Share:


குடும்பமே கொலை  -  தமிழகத்தை உலுக்கிய  அதிர்ச்சி சம்பவம் - நண்பர்களே அரங்கேற்றிய கொடூரம்  !

சென்னையில் சாக்கு மூட்டையில் பீகார் இளைஞர் சடலம் - மனைவி, குழந்தையையும் கொன்று வீசிய கொடூரம் : பீகார்  இளைஞர் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்ட சம்பவத்தில் அவரது மனைவி, மகனும் கொலை செய்து வீசப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக பீகாரைச்  சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 26-ம் தேதி அடையார், இந்திரா நகர், 1-வது அவென்யூ சாலையில் கிடந்த சாக்கு மூட்டையில் இளைஞர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக இருந்தது தெரிந்தது.  இது தொடர்பாக சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி போலீஸார் ஆய்வு செய்தனர். இதில் பைக்கில் வந்த 2 இளைஞர்கள் சாக்கு மூட்டையை வீசிச் சென்றது தெரிந்தது.


அதை அடிப்படையாக வைத்து விசாரித்தபோது கொலை செய்யப்பட்டது பீகார்  மாநிலத்தைச் சேர்ந்த கவுரவ் குமார் (24) என்பது தெரிந்தது. மேலும், கொலையாளிகள் அதே மாநிலத்தைச் சேர்ந்த சிக்கந்தர் (33), நரேந்திர குமார் (45), ரவிந்திரநாத் தாகூர் (45), விகாஷ் (24) உள்ளிட்ட 5 பேர் என்பதை கண்டறிந்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.  அவர்களிடம் போலீஸார் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய விசாரித்தனர். இதில் கவுரவ் குமார் மட்டுமல்லாமல் அவரது மனைவி முனிதா குமாரி (22) மற்றும் 2 வயது ஆண் குழந்தை பிர்மானி குமார் ஆகியோரையும் கொன்று, சாக்கு மூட்டையில் கட்டி மத்திய கைலாஷ் ரயில்வே பாலத்தின் கீழ் உள்ள பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் பெருங்குடி குப்பைக் கிடங்கில் வீசிச் சென்றதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தேடுதல் வேட்டையில், சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், முனிதா குமாரி உடலை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர். கொலை பின்னணி: கொலை செய்யப்பட்ட கவுரவ் குமார் முதலில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார். அங்கு அவர் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து சொந்த மாநிலம் சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்தவாறு அடையாறில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்யும் நண்பர் கிருஷ்ண பிரசாத்திடம் வேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அடையாறில் உள்ள செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றில் வேலை வாங்கித் தருவதாக கிருஷ்ண பிரசாத் தெரிவித்துள்ளார். இதையடுத்து கவுரவ் குமார் தனது மனைவி, 2 வயது மகனுடன் கடந்த 21-ம் தேதி சென்னை வந்துள்ளார்.  பின்னர் அடையாறில் உள்ள நண்பரை பார்க்கச் சென்றுள்ளார். அவர் தெரிவித்த இடத்தில் வேலையில்லை என தெரிவித்துவிட்டனர். பின்னர் தரமணி பாலிடெக்னிக்கில் காவலாளியாக பணி செய்யும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சிக்கந்தரை கிருஷ்ண பிரசாத் அறிமுகம் செய்துவைத்துள்ளார். சிக்கந்தர் வருமாறு கூறியதால் குடும்பத்துடன் கவுரவ் குமார் அங்கு சென்றார். கவுரவ் குமார் குடும்பத்தை தரமணி பாலிடெக்னிக் பின்புறம் உள்ள தனியார் கட்டிடத்தில் சிக்கந்தர் தங்க வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் சிக்கந்தர் 2 நண்பர்களுடன் அங்கேயே மது அருந்தியுள்ளார். அப்போது முனிதா குமாரியை சிக்கந்தரும் அவரது நண்பர்களும் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். இதை கவுரவ் குமார் தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் இரும்புக் கம்பியால் கவுரவ் குமாரை தாக்கினர்.  மேலும் அவரது மனைவியையும் சரமாரியாகத் தாக்கி கூட்டாக கற்பழித்தும் உள்ளனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர்.  அழுது கொண்டிருந்த அவர்களது குழந்தையை சுவற்றில் மோதி கொன்றனர்.  பின்னர் 3 பேரையும் கொலையாளிகள் தனித்தனி சாக்கு மூட்டையில் கட்டியுள்ளார். மறுநாள் அதிகாலையில் முதலில் சிறுவனின் உடலை மத்திய கைலாஷ் ரயில்வே பாலத்தின் கீழ் பக்கிங்ஹாம் கால்வாயிலும், முனிதா குமாரியின் உடலை பெருங்குடி குப்பைக் கிடங்கிலும் வீசினர். தொடர்ந்து கவுரவ் குமார் உடலை பெசன்ட் நகர் கடற்பகுதியில் வீச எடுத்து வந்தபோது அதிக எடை காரணமாக அடையாறு இந்திரா நகரில் மூட்டை சரிந்துள்ளது.  எனவே, கொலையாளிகள் அதை அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர் என்று அவர்கள் வாக்குமூலமாக கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், பெருங்குடி குப்பைக் கிடங்கில் ஜேசிபி இயந்திரம் மூலம் குப்பையை கிளறி முனிதா குமாரியின் உடலை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர். பீகாரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அதே மாநிலத்தைச் சேர்ந்தவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இணை ஆசிரியர்  ; N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment