by Vignesh Perumal on | 2026-03-29 02:14 PM
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் (தவெக) தனித்துப் போட்டியிடும் நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று (மார்ச் 29, 2026) தனது கட்சியின் வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், 234 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில் அவர் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்து தனது தேர்தல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
விஜய் தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார்.
குறிப்பாக பெரம்பூர், திருச்சி கிழக்கு சி. ஜோசப் விஜய் (தலைவர்), தியாகராயர் நகர் என். ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்), வில்லிவாக்கம் ஆதவ் அர்ஜுனா,
கோபிசெட்டிபாளையம் கே.ஏ. செங்கோட்டையன், மயிலாப்பூர் பி. வெங்கட்ராமன், கொளத்தூர் வி.எஸ். பாபு, எழும்பூர் (தனி) ராஜ் மோகன், ஆயிரம் விளக்கு ஜே.சி.டி. பிரபாகர், சைதாப்பேட்டை அருள்பிரகாசம், திருப்பரங்குன்றம் சி.டி.ஆர். நிர்மல் குமார், திருச்செங்கோடு கே.ஜி. அருண்ராஜ், தூத்துக்குடி நடிகர் ஸ்ரீநாத், காஞ்சிபுரம் ரஞ்சித்குமார், திருப்பூர் வடக்கு வி. சத்தியபாமா ஆகியோர் களம் காண்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், வேட்பாளர்களை அறிமுகப்படுத்திப் பேசிய விஜய், வரவிருக்கும் தேர்தல் ஒரு நேரடிப் போட்டியாக இருக்கும் என்று குறிப்பிட்டார். அதைத்தொடர்ந்து "4 முனைப் போட்டி, 40 முனைப் போட்டி எனப் பல கருத்துகள் நிலவினாலும், களத்தில் உண்மையான போட்டி திமுக மற்றும் தவெக இடையேதான் உள்ளது" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். "எங்கள் வேட்பாளர்கள் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மக்களுக்காக உழைப்பவர்கள். இவர்களை எம்.எல்.ஏ-க்களாக மாற்ற வேண்டியது மக்களாகிய உங்கள் பொறுப்பு. ஒருமுறை எங்களுக்கு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள்" என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
"எங்கள் வேட்பாளர்களுக்கு அனுபவம் இல்லை என்கிறார்கள். ஆனால் அனுபவம் உள்ளவர்கள் அந்த அனுபவத்தை வைத்து மக்களைச் சுரண்டத்தான் செய்தார்கள். எங்களுக்குத் தேவை நேர்மையும், மக்கள் சேவையும் தான்," என விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தார்.
வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதோடு, தவெக சில முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. 29 வயதிற்கு மேற்பட்ட வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ₹4,000 மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ₹2,000 உதவித்தொகை வழங்கப்படும். "மக்களின் ஒரு பைசாவைக் கூட தொடமாட்டோம்" என அனைத்து வேட்பாளர்களையும் உறுதிமொழி எடுக்க வைத்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ள நிலையில், விஜய்யின் இந்தப் பிரம்மாண்ட வேட்பாளர் அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
வங்கியில் கோடிக்கணக்கில் மோசடி - ஒருவர் கைது ! பெண் உட்பட 6 பேரைத் தேடும் போலீஸ் !!
பத்மநாபபுரம் அரண்மனை - பழமை மாறாமல் புதுப்பிக்க கோரிக்கை. !
போதை மாத்திரை விற்பனை - 3 பேர் கைது ! பொறி வைத்து பிடித்த போலீஸ் !!
விபரங்கள் இல்லாத ரசீது - வழக்கு ! ஆணையாளருக்கு பிடிவாரென்டு.!!
மசாஜ் சென்டரில் ஹைடெக் விபச்சாரம் - தட்டி தூக்கி போலீஸ் அதிரடி!