| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதியோர் உதவித்தொகை ஆணை வழங்கிய கலெக்டர் ரஞ்ஜீத் சிங்...!!!

by admin on | 2026-02-04 04:58 PM

Share:


உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதியோர் உதவித்தொகை ஆணை வழங்கிய கலெக்டர் ரஞ்ஜீத் சிங்...!!!

தேனி மாவட்டம் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் நலத்திட்டப் பயன்கள் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கும் விழாவில்  1875 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை  மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

 

மா ண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்,                            விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (04.02.2026)  உங்களுடன் ஸ்டாலின்  திட்டத்தின் 

10,000 முகாம்கள் நிறைவு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்  உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் 10,000 முகாம்கள் நலத்திட்டப் பயன்கள் மற்றும் 

ரூ.1.80 இலட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கி, 

"என் கனவு என் எதிர்காலம்" என்ற இணைய தளத்தினை  காணொளிக்காட்சி  வாயிலாக தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து,     தேனி  மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய சமுதாயக்கூடத்தில்  நடைபெற்ற விழாவில்  உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் நலத்திட்ட பயன்கள் மற்றும்  சமூக  பாதுகாப்புத் திட்டப்பயன்கள் என மொத்தம் 1,875 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை  மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள்,     சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.என்.இராமகிருஷ்ணன் அவர்கள் (கம்பம்), திரு.ஆ.மகாராஜன் அவர்கள் (ஆண்டிபட்டி) திரு.கே.எஸ்.சரவணகுமார் அவர்கள் (பெரியகுளம்) ஆகியோர் முன்னிலையில்  வழங்கினார். 

அன்றாடம் அரசுத்துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு, 

அரசு அலுவலர்கள்  வழங்கும் சேவைகளை செம்மைப்படுத்தி, அரசின் சேவைகளை விரைவாகவும், எளிதாகவும், சென்று சேரும்  வண்ணம் நிர்வாகத்தில் மற்றும் ஒரு மைல் கல்லாக“உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 15.07.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. 

இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புறப் பகுதிகளில் 13 துறைகளில் 43 சேவைகள், கிராமப்புறப் பகுதிகளில் 15 துறையில்  46 சேவைகள்  என தமிழ்நாட்டில்  உள்ள அனைத்து கடைக்கோடி மக்களுக்கும்  அவர்கள் அன்றாடம் அணுகும் அரசு துறைகளின் சேவைகள் /திட்டங்களை அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்குவது  இத்திட்டத்தின்  நோக்கமாகும். 


இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் 10,000 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, சிறப்பாக நடத்தப்பட்டது.  அதன்படி, தேனி  மாவட்டத்தில் உள்ள நகராட்சி,  பேரூராட்சி  மற்றும்  ஊராட்சிகளில் 15.07.2025 முதல்   10.10.2025  வரை    218  முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.  தேனி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ்,  இதுவரை 44,478 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இன்றைய தினம், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் நலத்திட்ட பயன்கள் மற்றும்  சமூக  பாதுகாப்புத் திட்டப்பயன்களின் கீழ்,  முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ்  70 பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1200/- முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ்  807  பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1500/- மாற்றுத்திறனாளி உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும்,   18  பயனாளிகளுக்கு மாதாந்தோறும் ரூ.1200/-  கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும்,  299 பயனாளிகளுக்கு  மாதாந்தோறும் ரூ.1200/-    விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும்,   675 பயனாளிகளுக்கு மாதாந்தோறும் ரூ.1200/-  இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 6 பயனாளிகளுக்கு மாதாந்தோறும் ரூ.1200/- முதிர்கன்னி உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும் என  மொத்தம்  1875 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

மேலும்,  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.31,00,000/- மதிப்பீட்டில் கனவு இல்லம் கட்டுவதற்கான ஆணைகளையும்,  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு சுயதொழில் தொடங்குவதற்கு

நிதி உதவியாக ரூ.50,000/-க்கான காசோலைகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில்  2 பயனாளிகளுக்கு  ரூ.13,380/- மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும்,   மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் திருமண நிதிஉதவி திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.1,88,804/- மதிப்பிலான   தங்க நாணயங்களையும் என மொத்தம் 19 பயனாளிகளுக்கு  ரூ.33,52,184/- மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.


 

          என் பெயர் முருகன். நான் தெப்பம்பட்டி பகுதியில் வசிக்கின்றேன்.  எனக்கு உறவினர்கள் யாரும் இல்லை.  

நான் உயரம் குறைவான மாற்றுத்திறனாளி  என்பதால் என்னால் நிலையான வேலைக்கு செல்ல இயலவில்லை.  சிறு சிறு வேலைகள் செய்தும், பிற உதவிகளையும் பயன்படுத்தி என் வாழ்க்கையை நடத்தி வருகின்றேன். 

இந்நிலையில் உங்களுடன் திட்ட முகாம் இராஜதானி பகுதியில் நடைபெற்றபோது மாற்றுத்திறனாளி உதவித்தொகை கோரி மனு அளித்திருந்தேன். எனது மனுவினை ஏற்று தற்பொழுது எனக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. இத்தொகை எனக்கு மிகவும் பேருதவியாக இருக்கும்.  இதனை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார். 



         என் பெயர் மாரியம்மாள். நான் சுக்காங்கால்பட்டி பகுதியில் வசித்து வருகின்றேன்.  எனது கணவர் சமீபத்தில் இறந்துவிட்டார்.  எனக்கு குழந்தைகள் இல்லை. தினசரி கூலி வேலை செய்து  எனது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றேன்.   எங்கள் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றபோது, விதவை உதவித்தொகை கோரி விண்ணப்பித்திருந்தேன்.  எனது விண்ணப்பத்தினை ஏற்று தற்பொழுது விதவை உதவித்தொகை  பெறுவதற்கான ஆணையினை வழங்கி உள்ளார்கள்.  இதன்மூலம் எனக்கு  மாதந்தோறும்  1200 ரூபாய் கிடைக்கும்.  இத்தொகையினை எனது அன்றாட செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்வேன்.  இத்தொகையினை வழங்கிய  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில்,  மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ராஜகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி தமிழரசி, பெரியகுளம் சார் ஆட்சியர் 

திரு.ரஜத் பீடன், இ.ஆ.ப.,  நகர்மன்றத் தலைவர்கள் திருமதி ரேணுபிரியா பாலமுருகன் (தேனி-அல்லிநகரம்), திருமதி சுமிதா சிவக்குமார் (பெரியகுளம்), பேரூராட்சி மன்றத் தலைவர்கள் திருமதி கீதாசசி (வீரபாண்டி),  திருமதி சந்திரகலா (ஆண்டிபட்டி),  திரு.பால்பாண்டி (தாமரைக்குளம்), திரு.நாகராஜ் (தென்கரை), திரு.நடேசன் (வடுகபட்டி), திருமதி நித்திய பிரியா (ஹைவேவிஸ்),   திருமதி லெட்சுமி (தேவாரம்), திருமதி தமிழ்செல்வி (கெங்குவார்பட்டி),  தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) திருமதி கவிதா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.வில்லியம் ஜேசுதாஸ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.சண்முகசுந்தர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி காமாட்சி,  உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் திரு.செய்யது முகமது மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்து வட்டாட்சியர்கள், செயல்  அலுவலர்கள், பொதுமக்கள்   உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர். 



WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment