| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

ஒரே அறையில் ஆணும் பெண்ணும் - குற்றமல்ல -உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு. !

by satheesh on | 2026-02-04 02:56 PM

Share:


ஒரே அறையில் ஆணும் பெண்ணும்  - குற்றமல்ல -உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு. !

திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமல்ல சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!


திருமணம் ஆகாத ஆணும் & பெண் ணும் ஒன்றாக ஒரே விடுதி அறையில் தங்குவது குற்றம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கோவை அவினாசி சாலையில் ஒரு கட்டிடத்தை குத்தகைக்கு எடுத்து ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தங்கும் விடுதி ஒன்றை நடத்தியது. இந்த விடுதியில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவின. இதையடுத்து கோவை (தெற்கு) தாசில்தார், பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது இந்த விடுதியில் தங்கியிருப்பவர்களின் முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங் களை பதிவு செய்யும் பதிவேடு இல்லை. ஓர் அறையில் திருமணம் ஆகாத ஆணும்,பெண்ணும் சட்ட விரோதமாக ஒன்றாக தங்கியிருந்தனர். அங்கு மதுபாட்டில்களும் இருந்தன. இவற்றை எல்லாம் பதிவு செய்த அதிகாரிகள் அந்த விடுதிக்கு உடனடியாக சீல் வைத்து இழுத்து மூடினர். இதையடுத்து சீலை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் அந்த விடுதியை நடத்தும் தனியார் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது இந்த வழக்கை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது. சமூக வலைதளங்களில் பரவிய செய்திகளின் அடிப்படையில் மட்டுமே விடுதியில் சோதனை நடத்தி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். சீல் வைப்பதற்கு முன்பு விளக்க நோட்டீஸ் கூட கொடுக்கவில்லை. மனுதாரர் விடுதியில் திருமணம் ஆகாத ஜோடிகளை அறையில் தங்க வைப்பது ஒழுக்கக்கேடானது என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால், அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். ஓர் அறையில், திருமணம் ஆகாத ஆணையும், பெண்ணையும் ஒன்றாக தங்க அனுமதித்தால் அது சட்டவிரோதமா என்று இந்த நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு அரசு தரப்பு வழக்கறிஞரிடம் பதில் இல்லை. ஒரே அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் தங்கக்கூடாது என்ற சட்டமோ, விதிகளோ இல்லை. மேலும், திருமணம் செய்யாமலேயே ஓர் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்ந்து, குடும்பம் நடத்துவது சட்டப்படி குற்றம் இல்லை என்றபோது ஓர்அறையில் ஒன்றாக தங்கினார்கள் என்பது எப்படி குற்றமாகும்? எனவே ஓர் அறையில் ஆணும், பெண்ணும் தங்கினார்கள் என்பதற்காக ஒரு விடுதிக்கு சீல் வைப்பது என்பது சட்ட விரோதமாகும். மேலும் விடுதி அறையில் மது பாட்டில்கள் இருந்தன. மது விற்பனை செய்ய விடுதி நிர்வாகம் உரிமம் எதுவும் பெறாததால் இது சட்டவிரோத செயல் என்று அதிகாரிகள் மற்றொரு குற்றச் சாட்டை சுமத்தியுள்ளனர். ஆனால் இந்த மதுபாட்டில்கள் விற்பனை செய்யவில்லை. அறையில் தங்கும் விருந்தாளிகள் அவற்றை கொண்டு வந்துள்ளனர். அதுவும் விடுதியில் தங்க வருபவர்களிடம் மதுபாட்டில்கள் இருக்கிறதா என்பதை பரிசோதிப்பது கடினம் என்று விடுதி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. விடுதியில் தங்க வருபவர்கள் மது அருந்துவதற்காக மதுபாட்டில்களை கொண்டு வந்துள்ளனர். 1996-ம் ஆண்டு கொண்டு வந்த தமிழ்நாடு மது சொந்த பயன்பாட்டுக்காக வைத்திருத்தல் விதிகளின்படி கடந்த 2017, ஜூன் 9-ல் தமிழக அரசு அரசாணை வெளியிட் டுள்ளது. அதில் ஒரு நபர், 4.5 லிட்டர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள், 7.8 லிட்டர் பீர், 9 லிட்டர் ஓயின் வைத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது. எனவே விடுதி அறையில் மது பாட்டில்கள் இருந்தது சட்டவிரோதம் இல்லை என்று முடிவு செய்கிறேன். மொத்தத்தில், மனுதாரர் விடுதி மீது அதிகாரிகள் எடுத்த ஒட்டு மொத்த நடவடிக்கையும் சட்ட விரோதமானது. சீல் வைப்பதற்கு முன்பு விடுதி நிர்வாகத்துக்கு சட்டப்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கவில்லை. எனவே விடுதியில் திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் ஒன்றாக ஓர் அறையில் தங்கினார்கள் என்பதும் மதுபாட்டில்கள் வைத்திருந்தனர் என்பதும் குற்றம் அல்ல. எனவே விடுதி நிர்வாகம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்கிறேன். இந்த உத்தரவு நகல் கிடைத்து, 2 நாட்களுக்குள், விடுதிக்கு வைக்கப்பட்ட சீலை ஆட்சியர் அகற்ற வேண்டும். இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.


இணை ஆசிரியர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment