| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

நெல்லை கோயில் விவகாரம்...! டேவிட் மீது வழக்கு...! நிர்வாகம் சார்பில் தகவல்....!

by Vignesh Perumal on | 2026-02-04 02:13 PM

Share:


நெல்லை கோயில் விவகாரம்...! டேவிட் மீது வழக்கு...! நிர்வாகம் சார்பில் தகவல்....!

நெல்லையப்பர் கோயில் சமபந்தி விருந்தில் நரிக்குறவர் சமூகக் குழந்தைகளுக்கு உணவு மறுக்கப்பட்டதாக எழுந்த புகாருக்கு, சிசிடிவி ஆதாரங்களுடன் கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளதுடன், இது தொடர்பாகப் போலீசில் புகாரும் அளித்துள்ளது.

நரிக்குறவர் குழந்தைகள் புறக்கணிக்கப்பட்டதாகச் சமூக வலைதளங்களில் வீடியோ பரவிய நிலையில், கோயில் நிர்வாகம் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 'பிப்ரவரி 3-ம் தேதி மதியம் 1:49 மணிக்கு டேவிட் என்பவர் ஒரு சில குழந்தைகளைச் சமபந்தி விருந்து நடைபெறும் இடத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

அந்த நேரத்தில் ஏற்கனவே விருந்து முடிந்துவிட்டதாலும், தயார் செய்யப்பட்டிருந்த உணவு முழுமையாகத் தீர்ந்துவிட்டதாலும், அங்கிருந்த ஊழியர் "உணவு முடிந்துவிட்டது" என்று மனிதாபிமானத்துடன் தெரிவித்துள்ளார்.

ஆனால், வேண்டுமென்றே ஜாதி ரீதியாகப் புறக்கணித்தது போலவும், குழந்தைகளைத் திட்டி வெளியே அனுப்பியது போலவும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாகக் கோயில் தரப்பில் கூறப்படுகிறது.

குழந்தைகளை அழைத்து வந்த டேவிட் என்பவர், கோயில் நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கோடும், சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் விதமாகவும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் கோயில் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக நெல்லை டவுன் காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரில்: "உணவு தீர்ந்த நிலையில் வந்தவர்களிடம் உண்மை நிலையை விளக்கியதைத் தவறாகச் சித்தரித்து, அரசுக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் எதிராகச் சதித் திட்டம் தீட்டி அவதூறு பரப்பிய டேவிட் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரப்பட்டுள்ளது.

முன்னதாக, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் இந்தச் சம்பவத்தைக் கடுமையாக விமர்சித்திருந்தனர். "சபாநாயகர் மற்றும் மேயர் முன்னிலையிலேயே சமூக நீதி குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது" என்று அவர்கள் சாடியிருந்தனர். தற்போது சிசிடிவி ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில், இது திட்டமிட்ட அவதூறா அல்லது நிர்வாகக் குறைபாடா என்பது குறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமபந்தி விருந்து என்பது குறிப்பிட்ட நேரத்தில் (பொதுவாக மதியம் 12 முதல் 1.30 மணி வரை) நடைபெறும் நிகழ்வாகும். அதன் பிறகு வரும் மக்களுக்கு உணவு வழங்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகக் கோயில் ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.










நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment