| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் அரசியல்

முக்குலத்தோர் வாக்கு - ஆட்டம் காட்டும் ஓபிஎஸ் - அதிரும் அரசியல் களம் !

by satheesh on | 2026-02-01 08:25 PM

Share:


முக்குலத்தோர் வாக்கு  - ஆட்டம் காட்டும் ஓபிஎஸ்  -  அதிரும்  அரசியல் களம்  !

முக்குலத்தோர் வாக்கு : அமைதியாய் காய் நகர்த்தும் ஓபிஎஸ்  :  

ஓபிஎஸ்க்கு அதிமுகவில் இனி இடமே இல்லை என்று எடப்பாடி பழனிசாமியால் தள்ளப்பட்டாலும், இன்னொரு புறம் அதிமுக அரசியலில் தவிர்க்க முடியாத நபர் என்ற நிலையில் தான் இன்னும் இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம் என்பது தான் தற்போதைய அரசியல் யதார்த்தம். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மீண்டும் கட்சிக்குள் இணைய வாய்ப்பே இல்லை என்று எத்தனை முறை வலியுறுத்தினாலும், 2026 சட்டமன்ற தேர்தலை நெருங்க நெருங்க அவருக்கான முக்கியத்துவம் பாஜகவில் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. அதனால் தான் அவரை கூட்டணி சேர்க்க துடியாய் துடிக்கிறது பாஜக. இதற்கு எல்லாம் காரணம் ஓபிஎஸ் மீது பாஜக கொண்டுள்ள தனிப்பட்ட அரசியல் அனுதாபம் அல்ல. கடந்த தேர்தல்களில் இருந்து அரசியல் கட்சிகள் கற்றுக் கொண்ட கடினமான பாடங்கள். குறிப்பாக தென் மாவட்ட அரசியல் தான் ஓபிஎஸ்ஸை இன்றும் முக்கியத்துவம் வாய்ந்த நபராக வைத்திருக்கிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. பல இடங்களில் வெற்றியை பறித்தது 'கேம் சேஞ்சர்' சக்திகள்தான். அப்போது அந்த இடத்தில் டிடிவி தினகரன் இருந்தார். இப்போது அவர் மீண்டும் கூட்டணிக்குள் வந்துவிட்டாலும், ஓபிஎஸ் வெளியே நிற்பது அதே மாதிரியான சூழலை மீண்டும் உருவாக்கிவிடுமோ என்ற அச்சம் என்டிஏ கூட்டணிக்குள் இருக்கிறது. முக்குலத்தோர் சமூக வாக்குகள் எந்த பக்கம் நகரும் என்பது தான் தென் மாவட்டங்களில் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக உள்ளது. ஓபிஎஸ் வெளியே இருந்தால், அந்த வாக்குகள் சிதறி, மீண்டும் அ.தி.மு.க.க்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாகவே பா.ஜ.க. தரப்பு கணக்குப் போடுகிறது. அதனால்தான், "அவரை கட்சிக்குள் வேண்டாம் என்றாலும், கூட்டணிக்குள் கொண்டுவருங்கள்" என்ற அழுத்தம் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மீது கொடுக்கப்பட்டு வருகிறது.

ஓபிஎஸ் அரசியல் எதிர்காலம் :ஆனால், கூட்டணியில் ஒருவரை சேர்த்தால், தொகுதி பங்கீட்டில் அ.தி.மு.க.வின் பங்கு குறையும் என்பதால், அந்த முயற்சிகளுக்கு இபிஎஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். மற்றொரு புறம், திமுகவும் ஓபிஎஸ்ஸை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கவில்லை. நடிகர் விஜயின் அரசியல் வருகையால் சில பகுதிகளில் வாக்கு சதவீதம் குறையக்கூடும் என்ற கவலை திமுகவுக்கு இருக்கிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் அந்த பாதிப்பை சமநிலைப்படுத்த, ஓபிஎஸ் போன்ற அனுபவமிக்க அரசியல் முகங்கள் பயன்படக்கூடும் என்ற கணக்குகளும் போடப்படுகின்றன.



தென் மாவட்ட அரசியல் :அதனால்தான், நேரடியாக கட்சியில் இணைக்க முடியாவிட்டாலும், தனி அணியாக கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பையும் திமுக மூடிவிடவில்லை. விஜய் தலைமையிலான தவெக இதைவிட ஒரு படி முன்னே சென்று கணக்குப் போடுகிறது. ஓபிஎஸ் தனி அணியாக வருவதைவிட, நேரடியாக தவெக-க்குள் இணைந்தால், தென் மாவட்டங்களில் கட்சியை விரிவுபடுத்த முடியும் என்றே அங்குள்ள யோசனை. மண்டல அரசியல், சாதி அடிப்படையிலான வாக்கு சேர்க்கை ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டே தவெகஅடுத்த நகர்வுகளை  திட்டமிடுகிறது

 

2026 சட்டமன்ற தேர்தல் :இந்த மூன்று அணிகளின் கணக்குகளுக்கும் நடுவில், ஓபிஎஸ் மட்டும் அவசர முடிவு எடுக்காமல் காத்திருக்கிறார். காரணம், இது ஒரு தேர்தலுக்கான முடிவு அல்ல; தன்னை நம்பி இருக்கும் ஆதரவாளர்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முடிவு. ஆனால், கூட்டணிகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், நீண்ட நாட்கள் இப்படியே தயக்கத்தில் இருக்க முடியாது என்பதே அரசியல் நிதர்சனம். ஓபிஎஸ் எடுக்கும் ஒரு முடிவு, தென் தமிழக அரசியல் சமன்பாடுகளையே மாற்றும் சக்தி கொண்டதாகவே பார்க்கப்படுகிறது. அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதனை காலம் தான் முடிவு செய்யும், பொறுத்திருந்து பார்ப்போம். ! அவருடைய ஆதரவாளரும் காத்திருக்கிறார்கள் ...!நன்றி! 

இணை ஆசிரியர்  : N. சதீஷ்குமார்,  பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment