by Vignesh Perumal on | 2025-12-24 01:04 PM
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தமிழக அரசின் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்க லஞ்சம் வாங்கிய விரிவாக்க அலுவலரை லஞ்ச ஒழிப்புப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், A.வெள்ளோடு பகுதியைச் சேர்ந்தவர் பிரியதர்ஷன் (30). இவர் தமிழக அரசின் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோரி விண்ணப்பித்திருந்தார்.
இந்த உதவித்தொகையைப் பெற்றுத் தருவதற்கான நடைமுறைகளை முடிக்க, திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் விரிவாக்க அலுவலராகப் பணியாற்றும் உமாராணி என்பவர் பிரியதர்ஷனிடம் ரூ.3,000 லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரியதர்ஷன், இது குறித்து திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், லஞ்ச அதிகாரியைப் பிடிக்க ரகசியத் திட்டம் தீட்டினர். அதன்படி, ரசாயனம் தடவிய ரூ.3,000 ரொக்கப் பணத்தைப் பிரியதர்ஷனிடம் கொடுத்து அனுப்பினர்.
இன்று திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து, அதிகாரி உமாராணியிடம் பிரியதர்ஷன் பணத்தைக் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி நாகராஜ் தலைமையிலான போலீசார் அதிரடியாக உள்ளே புகுந்தனர்.
பிரியதர்ஷனிடமிருந்து ரூ.3,000 லஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்ட உமாராணியை, போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். அவரது கைகளைச் சோதித்தபோது ரசாயனம் தடவிய நோட்டுகளைத் தொட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உமாராணியை லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் பணியாற்றி வந்த அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களையும் போலீசார் சோதனையிட்டு வருகின்றனர்.
மக்களுக்குச் சேர வேண்டிய அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க லஞ்சம் கேட்ட அதிகாரி பிடிபட்ட சம்பவம், திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி - மோகன் கணேஷ் திண்டுக்கல்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை...! கலெக்டர் அதிரடி அறிவிப்பு...!
ரூ.3,000 லஞ்சம்...! பெண் அதிகாரி கையும் களவுமாக கைது..!
தங்கம் விலை மீண்டும் உயர்வு...! புதிய உச்சம்....!
முதல் பெண் சிஇஓ...! சரோஜினி பத்மநாதன் இன்று பொறுப்பேற்பு..!
எடப்பாடியுடன் இணைய மாட்டோம் .! - தகுந்த பாடம் புகட்டுவோம் .!! O P S ...