by Vignesh Perumal on | 2026-03-12 05:30 PM
பழனி அருகே ஆயக்குடி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்களைக் கத்தியைக் காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தைப் பறித்துச் சென்ற வழக்கில், 2 பெண்கள் உட்பட 7 பேர் கொண்ட கும்பலைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த ஆயக்குடி ஐ.டி.ஒ. பள்ளி அருகே உள்ள ஒரு வீட்டில் பெண்கள் மட்டும் தனியாக இருந்துள்ளனர். அப்போது அங்கு புகுந்த மர்ம கும்பல், பெண்களைக் கத்தியைக் காட்டி மிரட்டித் துன்புறுத்தியுள்ளனர். மேலும், அவர்கள் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகை மற்றும் ரூ.5,000 ரொக்கப் பணத்தைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து ஆயக்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) பிரதீப் உத்தரவின் பேரில், பழனி துணைக்காவல் கண்காணிப்பாளர் (DSP) தனஞ்செயன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
ஆயக்குடி ஆய்வாளர் ராஜேஷ், சார்பு ஆய்வாளர் முரளி மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர ஆய்வு நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், கொள்ளையர்களைப் பற்றிய முக்கியத் தடயங்கள் போலீசாருக்குக் கிடைத்தன.
போலீசாரின் தீவிரத் தேடுதல் வேட்டையில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் பிடிபட்டது. கைது செய்யப்பட்டவர்களில் ராஜா (23) - சாமிநாதபுரம், சசிகுமார் (20) - சாமிநாதபுரம், கண்மணி (36) - திண்டுக்கல், காமாட்சி (26) - திண்டுக்கல், சிவனேசன் (19) - சமயபுரம், பாண்டியராஜா (24) - மதுரை, மாரிமுத்து (33) - மதுரை என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தத் திட்டமிட்ட கொள்ளைச் சம்பவத்தில் பிடிபட்ட இரண்டு பெண்களுக்கு என்ன மாதிரியான தொடர்பு இருக்கிறது என்பது குறித்தும், இவர்கள் வேறு ஏதேனும் திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்களா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!