| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் அரசியல்

தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..! ஓபிஎஸ், தினகரனுக்கு இபிஎஸ் சம்மதம்..!

by Vignesh Perumal on | 2025-12-23 05:47 PM

Share:


தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..! ஓபிஎஸ், தினகரனுக்கு இபிஎஸ் சம்மதம்..!

தமிழக சட்டமன்றத் தேர்தல் (2026) நெருங்கி வரும் வேளையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் நிலவி வந்த இழுபறிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரை கூட்டணியில் இணைக்கச் சம்மதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் இன்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையே நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. கடந்த சில மாதங்களாகவே, "சிதறிக் கிடக்கும் அதிமுக அணிகளை ஒன்றிணைத்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும்" என பாஜக மேலிடம் எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்து வந்தது.

ஆரம்பத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த இபிஎஸ், தற்போது நிலவும் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனைத் தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) அங்கமாக ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த ரகசியப் பேச்சுவார்த்தையின் முடிவில், இரு தரப்புக்கும் ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகள் குறித்தும் ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகள். டிடிவி தினகரனின் அமமுக-விற்கு 6 சட்டமன்றத் தொகுதிகள் தருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த எண்ணிக்கையானது ஆரம்பத்தில் அவர்கள் கேட்டதை விடக் குறைவு என்றாலும், எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒரு வழியாக இணங்கி வந்திருப்பதே பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இபிஎஸ் ஒரு முக்கிய நிபந்தனையை விதித்துள்ளதாகத் தெரிகிறது. அதாவது, இவர்கள் இருவரும் 'கூட்டணி கட்சிகளாக' மட்டுமே செயல்பட வேண்டும்; அதிமுக கட்சிக்குள் அவர்களுக்கு எவ்வித பதவியோ அல்லது மறுபிரவேசமோ கிடையாது என்பதில் அவர் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தகவல் உண்மையாகும்பட்சத்தில், வரும் சட்டமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களில் அதிமுக கூட்டணியின் பலம் பன்மடங்கு அதிகரிக்கும். குறிப்பாக, முக்குலத்தோர் சமூக வாக்குகளை மீண்டும் ஒருங்கிணைக்க இது உதவும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை என்றாலும், விரைவில் டெல்லியில் பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் முன்னிலையில் இந்த மெகா கூட்டணி குறித்த முறையான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.











நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment