| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

கொடைக்கானலில் 2-வது நாளாக தொடரும் அவலம்...! விலங்குகள் ஊருக்குள் தஞ்சம்...!

by Vignesh Perumal on | 2026-03-27 10:28 AM

Share:


கொடைக்கானலில் 2-வது நாளாக தொடரும் அவலம்...! விலங்குகள் ஊருக்குள் தஞ்சம்...!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகக் காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. இதனால் பல ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதிகள் மற்றும் அரிய வகை மூலிகைச் செடிகள் கருகி சாம்பலாகி வருகின்றன.

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான பள்ளங்கி, கோம்பை, மற்றும் அடிசரை உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிகளில் நேற்று திடீரெனத் தீப்பிடித்தது. கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், நிலவும் கடும் வெயில் மற்றும் காய்ந்த சருகுகள் காரணமாகத் தீ மிக வேகமாக அடுத்தடுத்த பகுதிகளுக்குப் பரவியது. இன்று 2-வது நாளாகவும் தீ கட்டுக்கடங்காமல் எரிந்து கொண்டிருக்கிறது.

மலைச்சரிவுகளில் பற்றி எரியும் இந்தத் தீயால், அப்பகுதியில் உள்ள அரிய வகை மூலிகைச் செடிகள், சந்தன மரங்கள் மற்றும் அரிய வகை வன மரங்கள் கருகி வருகின்றன. பல அடி உயரத்திற்குத் தீ எழும்புவதால் அந்தப் பகுதியே கரும்புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.

காட்டுத்தீயின் வெப்பம் மற்றும் புகையைத் தாங்க முடியாமல் வனப்பகுதிக்குள் இருக்கும் காட்டு எருமைகள் (காட்டுமாடு), காட்டுப் பன்றிகள், புள்ளி மான்கள் மற்றும் சிறுத்தைகள் உள்ளிட்ட விலங்குகள் அங்கிருந்து வெளியேறி வருகின்றன. இவை அருகில் உள்ள விளைநிலங்கள் மற்றும் மக்கள் வசிக்கும் கிராமப் பகுதிகளுக்குள் தஞ்சமடைந்து வருவதால், மலைக்கிராம மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள கொடைக்கானல் வனச்சரக அலுவலர்கள் மற்றும் வனத்துறையினர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டும், பச்சை மரக்கிளைகளைக் கொண்டும் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர். எனினும், மலைச்சரிவுகள் செங்குத்தாக இருப்பதாலும், பலத்த காற்று வீசுவதாலும் தீயை அணைப்பதில் பெரும் சவால் நிலவி வருகிறது.

மலைப்பாதைகளில் கரும்புகை சூழ்ந்துள்ளதால், கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. மர்ம நபர்கள் யாரேனும் காட்டில் தீ வைத்தார்களா? அல்லது வெயில் கொடுமையால் உராய்வு ஏற்பட்டுத் தீப்பிடித்ததா? என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.









நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads
Recent News

Leave a Comment