| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.93,350 பறிமுதல்...!

by Vignesh Perumal on | 2026-03-21 06:57 PM

Share:


உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.93,350 பறிமுதல்...!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில், உரிய ஆவணங்களின்றி சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.93,350 ரொக்கப் பணத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதைத் தடுக்கத் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இன்று நத்தம் - செந்துறை சாலையில் உள்ள அய்யனார்புரம் சர்வ சேவா மேல்நிலைப்பள்ளி அருகே பறக்கும் படைத் தலைவர் சிவராமன் தலைமையிலான அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை அதிகாரிகள் மறித்துச் சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் வந்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன் (36) என்பவரிடம் சோதனை நடத்தியபோது, அவர் உரிய ஆவணங்களின்றி ரூ.93,350 ரொக்கப் பணத்தைக் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. 

தேர்தல் விதிமுறைப்படி ரூ.50,000-க்கு மேல் உரிய ஆதாரமின்றிப் பணம் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்பதால், அந்தப் பணத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் முறைப்படி பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அதிகாரிகள் உடனடியாக நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாண்டியராஜ் அவர்களிடம் அந்தப் பணம் ஒப்படைக்கப்பட்டது. 

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாண்டியராஜ் முன்னிலையில் எண்ணப்பட்ட அந்தப் பணம், உடனடியாக அரசுப் பாதுகாப்புடன் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில், முறையான விசாரணைக்குப் பிறகு பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.










நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment