by Vignesh Perumal on | 2026-03-11 09:14 PM
நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவி நீக்கம் செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம், பல மணி நேர காரசார விவாதத்திற்குப் பிறகு இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் தோற்கடிக்கப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த மார்ச் 9-ஆம் தேதி தொடங்கியது. கூட்டத் தொடர் தொடங்கியதிலிருந்தே சபாநாயகர் பாரபட்சமாக நடந்துகொள்வதாகவும், எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதாகவும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதன் தொடர்ச்சியாக, சபாநாயகர் ஓம் பிர்லாவைப் பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவேத் முன்மொழிந்தார். இந்தத் தீர்மானத்திற்கு 100-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இன்று காலை மக்களவை கூடியதும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவேத், "சபாநாயகர் அனைத்து தரப்பினரின் நம்பிக்கையைப் பெறத் தவறிவிட்டார்; அவர் நடுநிலையுடன் செயல்படவில்லை" என்று கடுமையாகச் சாடினார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில், சபாநாயகரின் செயல்பாடுகள் பாரபட்சமாக இருப்பதாகக் குற்றம் சாட்டினார். அவர் பேசிக் கொண்டிருந்தபோது குறுக்கிட்ட மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
கே.சி. வேணுகோபால் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் எம்.பி. சுப்பராயன் உள்ளிட்டோர் விவாதத்தில் கலந்துகொண்டு சபாநாயகருக்கு எதிராகத் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர்.
மாலை வேளையில் விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சிகளின் புகார்களைத் திட்டவட்டமாக மறுத்தார். தேவையில்லாத காரணங்களுக்காக உயரிய பதவியில் இருப்பவர் மீது தீர்மானம் கொண்டு வருவதாகக் கூறி எதிர்க்கட்சிகளைக் கடுமையாகச் சாடினார்.
விவாதத்தின் முடிவில், தீர்மானம் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) அவையில் பெரும்பான்மை பலம் இருப்பதால், எதிர்க்கட்சிகளின் தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் தோற்கடிக்கப்பட்டது. இதன் மூலம் ஓம் பிர்லா சபாநாயகர் பதவியில் நீடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சபாநாயகருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
மதுரையில் புதிய கூடுதல் நீதிமன்றம் கட்டிடம்...! உச்ச நீதிமன்ற நீதிபதி...! பங்கேற்பு...!
பெரும் சோகம்...! கார் மோதி மில் தொழிலாளி பலி...! போலீசார் விசாரணை...!
உளவுத்துறை ஐ.ஜி. இடமாற்றம்..! தேர்தல் ஆணையம் அதிரடி..!
10-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை..! போலீசார் தீவிர விசாரணை...!
யாரும் ஓட்டு கேட்டு உள்ளே வராதீர்கள்...! தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்..! பரபரப்பு...!