by Vignesh Perumal on | 2026-03-09 02:22 PM
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வழிப்பறி மற்றும் தாக்குதல் வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட பொறியியல் பட்டதாரி வாலிபர், மதுரையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவல்துறையினர் அவரைத் தாக்கியதாலேயே உயிரிழப்பு ஏற்பட்டதாகக் கூறி அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மானாமதுரையைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன் (26) என்ற பொறியியல் பட்டதாரி மற்றும் அவரது நண்பர் குணா ஆகிய இருவர் மீது, ஜெயக்குமார் மற்றும் அழகர் என்பவர்களை ஆயுதங்களால் தாக்கியதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மானாமதுரை போலீசார் இவர்களைக் கைது செய்தனர். ஆகாஷ் மீது ஏற்கனவே சில வழக்குகள் இருப்பதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இந்த விபரீத சம்பவம் குறித்து சிவகங்கை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்: "ஆகாஷைப் பிடிக்க முயன்றபோது, அவர் பாலத்தில் இருந்து குதித்துத் தப்பிக்க முயன்றார்.
அப்போது கீழே விழுந்ததில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. மார்ச் 6-ம் தேதி முறைப்படி கைது செய்யப்பட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மார்ச் 7-ம் தேதி நீதிபதி அவரை நேரில் சந்தித்து நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ், ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால், காவல்துறையினர் ஆகாஷை விசாரணை என்ற பெயரில் கடுமையாகத் தாக்கி சித்திரவதை செய்ததாலேயே அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, குற்றவாளி என முத்திரை குத்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், நிவாரணம் மற்றும் அரசு வேலை கோரியும் மானாமதுரை பேருந்து நிலையம் அருகே மதுரை - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து 'காவல்துறை சித்திரவதைக்கு எதிரான கூட்டு நடவடிக்கை' அமைப்பின் ஆலோசகர் ஹென்றி டிபேன் கூறுகையில், "தமிழகத்தில் அண்மைக்காலமாக லாக்-அப் மரணங்கள் அதிகரித்து வருவது கண்டிக்கத்தக்கது. குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீதான காவல்துறை அத்துமீறல்கள் தொடர்கின்றன," எனத் தெரிவித்துள்ளார். மேலும், உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆகாஷின் உடலில் பல இடங்களில் எலும்பு முறிவுகள் இருந்ததாகவும், 'ஃபேட் எம்பாலிசம்' காரணமாக மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உண்மை நிலை தெரியவரும்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!