by Vignesh Perumal on | 2026-02-28 02:48 PM
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தனியார் காகித ஆலையில் கூழ் அரைக்கும் பாய்லரைச் சுத்தம் செய்ய உள்ளே இறங்கிய வடமாநிலத் தொழிலாளர்கள் இருவர், விஷவாயு தாக்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த புஷ்பத்தூர் பகுதியில் தனியார் காகித ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நூர் அலாம் மற்றும் ராம் புரூஸ் மஞ்சூரி ஆகிய இரண்டு இளைஞர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்தனர்.
இன்று வழக்கம்போல ஆலைப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில், காகிதக் கூழ் அரைக்கும் பெரிய பாய்லர் இயந்திரத்தின் உட்பகுதியைச் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக நூர் அலாம் மற்றும் ராம் புரூஸ் மஞ்சூரி ஆகிய இருவரும் பாய்லரின் உள்ளே இறங்கினர்.
பாய்லரின் உட்புறத்தில் நீண்ட நாட்களாகத் தேங்கியிருந்த கழிவுகளிலிருந்து வெளியேறிய கடுமையான விஷவாயு அந்த இளைஞர்களைத் தாக்கியது. இதில் நிலைகுலைந்த இருவரும் பாய்லருக்குள்ளேயே மயங்கி விழுந்தனர்.
வெளியே இருந்த மற்ற தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்து, அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இருவரும் மீட்கப்பட்டு, உடனடியாக சிகிச்சைக்காகப் பழனி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே நூர் அலாம் மற்றும் ராம் புரூஸ் மஞ்சூரி ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர்.
இந்த விபத்து குறித்துத் தகவல் அறிந்த சாமிநாதபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மருதுபாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
தொழிலாளர்கள் பாய்லருக்குள் இறங்கும் போது முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதா? ஆலை நிர்வாகத்தின் தரப்பில் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதா? என்ற கோணங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காகப் பழனி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
வைகை அணையை தூர்வார வேண்டும் வி ஆர் ராஜன் கோரிக்கை....!!!
கஞ்சா பறிமுதல் எட்டு பேர் கைது....!!!
வங்கியில் கோடிக்கணக்கில் மோசடி - ஒருவர் கைது ! பெண் உட்பட 6 பேரைத் தேடும் போலீஸ் !!
பத்மநாபபுரம் அரண்மனை - பழமை மாறாமல் புதுப்பிக்க கோரிக்கை. !
போதை மாத்திரை விற்பனை - 3 பேர் கைது ! பொறி வைத்து பிடித்த போலீஸ் !!