by Vignesh Perumal on | 2026-02-21 10:56 AM
உலகத் தாய்மொழித் திருநாளை முன்னிட்டு, மொழியின் முக்கியத்துவம் குறித்தும், அதை அழியாமல் காக்க வேண்டிய அவசியம் குறித்தும் கவிஞர் வைரமுத்து அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிக ஆழமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
மொழி என்பது வெறும் ஒலிக்கருவி அல்ல, அது ஒரு "உயிரி" என்று புகழாரம் சூட்டியுள்ள கவிஞர், மொழியை ஏன் காக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை அடுக்கியுள்ளார். "காலம் சேமிக்கப்பட்ட கலம்" என மொழியை வர்ணிக்கும் அவர், ஒரு இனத்தின் மரபு, வரலாறு, மருத்துவம், பண்பாடு, கலை, இலக்கியம், விழுமியம் மற்றும் பெருமிதம் ஆகியவற்றை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தும் ஒரு "ஆவண வாகனம்" மொழிதான் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மொழி உயிர்ப்புடன் இருப்பது அது பேசப்படுவதால் மட்டுமே சாத்தியம் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், "ஒரு மொழி பேசும் கடைசி மனிதனின் குழியில், அந்த மொழியும் சேர்த்தே புதைக்கப்படுகிறது" என்ற எச்சரிக்கையை முன்வைத்துள்ளார். எனவே, அன்றாட வாழ்வில் தாய்மொழியைப் பயன்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், "தயவுசெய்து தாய்மொழியிலேயே திட்டுங்கள்" என்று உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தனித்தமிழில் உரையாடுபவர்களைப் பலரும் விசித்திரமாகப் பார்க்கும் போக்கைக் கண்டித்துள்ள வைரமுத்து, "தனித்தமிழில் பேசுபவர்களை விசித்திர விலங்காகப் பார்க்காதீர்கள்; அவர்கள்தான் அந்த மொழியின் கடவுக் கடவுள்" என்று பாராட்டியுள்ளார்.
ஒரு மொழி வெறும் பேச்சோடு மட்டும் நின்றுவிடக் கூடாது; அது அதிகாரப்பூர்வமான தளங்களில் இயங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் முன்வைத்த முக்கியக் கருத்துகளில், "அதிகார மையங்களில் தாய்மொழி புழங்க வேண்டும்.
அரசியல் களத்தில் அதன் முக்கியத்துவம் உணரப்பட வேண்டும்.
தாய்மொழி வழிக்கல்வி தழைக்க வேண்டும்.
நவீன அறிவியல் கருவிகளை ஆளும் மொழியாகத் தாய்மொழி மாற வேண்டும்.
இவை அமையாவிட்டால் எந்தவொரு தேசிய இனத்தின் மொழியும் தழைக்காது என்பதை ஓர் "அச்சடித்த எச்சரிக்கை"யாக அவர் விடுத்துள்ளார்.
"தாய்மொழி புழங்குக; தாய்மொழி வழங்குக; எவ்வினத்திலும் தாய்மொழியே விளங்குக" என்ற முழக்கத்துடன் தனது செய்தியை அவர் நிறைவு செய்துள்ளார்.
கவிஞர் வைரமுத்துவின் இந்தத் தமிழ் உணர்வுமிக்க வரிகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!