by Vignesh Perumal on | 2026-02-20 03:04 PM
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக அரசின் செயல்பாடுகளைப் பாராட்டியதோடு, வரும் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாகக் கூறி அரசியல் வட்டாரத்தை அதிரவைத்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பு 'மரியாதை நிமித்தமானது' என்று கூறப்பட்டாலும், தேர்தல் நேரத்தில் இது பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: "கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியுள்ளது. குறிப்பாகப் பேரிடர் காலங்களில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. அதற்காக முதலமைச்சருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன். தற்போதைய அரசியல் சூழலைப் பார்க்கும்போது, திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன."
செய்தியாளர்கள் அவரிடம், "நீங்கள் திமுக அணியில் இணையப் போகிறீர்களா?" எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஓ.பி.எஸ்: "அரசியலில் எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். கூட்டணி குறித்து இப்போதே எதுவும் சொல்லிவிட முடியாது. கொஞ்சம் பொறுமையாக இருங்கள், நல்ல முடிவு வரும்போது நானே அறிவிப்பேன்."
இந்த 'பொறுமையாக இருங்கள்' என்ற பதில், அவர் திமுக தலைமையிலான கூட்டணியில் இணையத் தயாராகி வருவதையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மேலிடத்துடன் ஓ.பி.எஸ் மோதல் போக்கைக் கடைபிடித்து வந்தார். குறிப்பாக, தன்னை அதிமுகவில் மீண்டும் சேர்க்க எடப்பாடி பழனிசாமி மறுத்து வந்த நிலையில், ஓ.பி.எஸ் தனது அடுத்தகட்ட நகர்வாக திமுகவை நோக்கி நகர்ந்துள்ளது உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் திமுகவில் இணைந்துள்ள நிலையில், தற்போது ஓ.பி.எஸ்-ஸின் இந்த நகர்வு அதிமுக (EPS) மற்றும் பாஜக அணிகளுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
இரவோடு இரவாக டீலங்கை முடித்த மூவர் கூட்டணி - தேமுதிக கூட்டணியில் இணைப்பு! கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக வைத்த செக் ?
தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து - 4 பெண்கள் காயம் !
அரசியலில் திடீர் திருப்பம்...! ஓ.பி.எஸ் அதிரடிப் பேட்டி..!
அமைச்சர் கே.என். நேருவுக்கு நெருக்கடி..! புகாரில் வழக்குப்பதிவு செய்ய...! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
அதிர்ச்சியில் உலக நாடுகள்...! ஏலியன்கள்...! ட்ரம்ப் அதிரடி உத்தரவு..!