by Vignesh Perumal on | 2026-02-20 02:43 PM
தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவுக்கு எதிராக, பணி நியமனங்கள் மற்றும் ஒப்பந்தங்களில் சுமார் ரூ.1,020 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் புகாரில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்ற பணி நியமனங்கள் மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை ஒதுக்கியதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அமலாக்கத்துறை (ED) நடத்திய முதற்கட்ட ஆய்வில், சுமார் ரூ.1,020 கோடி அளவுக்கு லஞ்சப் பணம் கைமாறியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆதாரங்களை உள்ளடக்கிய கடிதத்தை அமலாக்கத்துறை தமிழக டிஜிபி-க்கு (DGP) அனுப்பியிருந்தது. ஆனால், அதன் மீது மாநில காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, அதிமுக வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது.
அமலாக்கத்துறை வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில், இந்த விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதற்கான 'குற்ற முகாந்திரம்' (Prima Facie) இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
எனவே, அமைச்சர் கே.என். நேரு மற்றும் இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய வேண்டும்.
வழக்குப் பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல், இது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு குறித்து பாஜக தேசியக் குழு உறுப்பினர் அண்ணாமலை தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்: "அமலாக்கத்துறை வழங்கிய வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறோம். நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.888 கோடி முதல் ரூ.1,020 கோடி வரை ஊழல் நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்."
ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான கே.என். நேரு மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது திமுக அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே செந்தில் பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்கள் மீது மத்திய முகமைகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது நேரு மீதான இந்த உத்தரவு தமிழக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை முன்வைத்து அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி வருகின்றன.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!