| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் BJP

அமித்ஷாவை புறக்கணித்தாரா அண்ணாமலை...? பாஜக மேலிடத்துடன் நீடிக்கும் மோதல்..! தொண்டர்கள் அதிர்ச்சி..!

by Vignesh Perumal on | 2026-02-15 06:21 PM

Share:


அமித்ஷாவை புறக்கணித்தாரா அண்ணாமலை...? பாஜக மேலிடத்துடன் நீடிக்கும் மோதல்..! தொண்டர்கள் அதிர்ச்சி..!

தமிழகத்திற்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்கச் செல்லாமல் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை புறக்கணித்தது, தமிழக பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பதவி விவகாரத்தில் கட்சி மேலிடத்துடன் அவர் கொண்டுள்ள அதிருப்தியே இதற்குத் திட்டமிட்ட காரணம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இரவு 11.05 மணிக்கு திருச்சி வந்தடைந்தார். அவரை வரவேற்கத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் விமான நிலையம் சென்றிருந்தனர்.

இரவு திருச்சியில் தங்கிய அமித்ஷா, மறுநாள் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். பின்னர் மீண்டும் திருச்சி வழியாக மாலை 6 மணிக்கு டெல்லி புறப்பட்டார். இந்த இரண்டு நிகழ்வுகளிலும் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை.

அண்ணாமலை அமித்ஷாவைச் சந்திக்க வராதது குறித்து பாஜக மூத்த நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுவதாவது: 'மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, தனக்குத் தேசிய அளவில் முக்கியப் பதவி அல்லது வெளிமாநில எம்பி பதவி மூலம் மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என அண்ணாமலை எதிர்பார்த்தார். ஆனால், பிரதமர் மோடியோ, அமித்ஷாவோ இதற்குப் பச்சைக்கொடி காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

அதிமுக - பாஜக கூட்டணியை மீண்டும் அமைப்பதில் அண்ணாமலைக்கு உடன்பாடு இல்லை என்றும், இதனால் கூட்டணி தோல்வியடையத் தனது ஆதரவாளர்களை அவர் தூண்டிவிட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

கட்சி மேலிடம் தன்னைத் தொடர்ந்து கண்டுகொள்ளாததால், அண்ணாமலை அதிருப்தியின் உச்சத்தில் இருப்பதாகவும், அதன் வெளிப்பாடாகவே அமித்ஷாவின் வருகையைப் புறக்கணித்ததாகவும் தெரிகிறது.

அமித்ஷா திருச்சியில் இருந்தபோது, அண்ணாமலை சென்னையில் இருந்துள்ளார். அதே சமயம் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமித்ஷாவைத் தான் சந்திக்கவில்லை என்றாலும், சென்னையில் நடந்த இந்தக் கூட்டத்திலாவது அண்ணாமலை பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அண்ணாமலை இந்தக் கூட்டத்தையும் தவிர்த்துள்ளார்.

ஏற்கனவே ஒரு வாரத்திற்கு முன்பு நடைபெற்ற கூட்டத்திற்கு வராத போது, பி.எல். சந்தோஷ் அவரை அழைத்து எச்சரித்ததாகவும், அதன் பின்னரே ஒரு கூட்டத்தில் அவர் பங்கேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கியத் தலைவர்களின் வருகையைத் தொடர்ந்து புறக்கணித்து வரும் அண்ணாமலையின் செயல்பாடு, கட்சித் தொண்டர்களிடையே குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், அண்ணாமலையின் இந்தச் செயல்பாடுகள் குறித்து கட்சி மேலிடத்திற்குப் புகார் அளிக்க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

தமிழக பாஜகவில் நிலவும் இந்த அதிகாரப் போட்டி மற்றும் உட்கட்சி மோதல் வரும் காலங்களில் கட்சியில் மேலும் பல மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.










நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment