by Vignesh Perumal on | 2026-02-13 04:10 PM
தமிழக பாஜகவில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மாநில அளவில் 'சக்திகேந்திரா' அமைப்பை நிர்வகிக்கும் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பொறுப்பேற்ற கையோடு, பிப்ரவரி 17 முதல் தமிழகம் தழுவிய அளவில் தெருமுனைக் கூட்டங்களை நடத்த அவர் உத்தரவிட்டுள்ளார்.
பாஜக தலைமை சமீபத்தில் தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்தது. இதில் அண்ணாமலைக்கு மதுரை தெற்கு, காரைக்குடி உட்பட 6 முக்கியத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், தனது தந்தையைத் தங்கி இருந்து கவனிக்க வேண்டிய சூழல் இருப்பதால், இந்தப் பொறுப்புகளை ஏற்க அண்ணாமலை மறுப்புத் தெரிவித்தார். இது அவர் அதிருப்தியில் இருப்பதாகப் பேசப்பட்ட நிலையில், டெல்லி மேலிடத் தலைவர்கள் தலையிட்டு அவருக்கு மாநில அளவிலான பொறுப்பை வழங்கியுள்ளனர்.
தற்போது அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு, கட்சியின் வேர் மட்டத்திலான அமைப்பை வலுப்படுத்துவதாகும்.
தமிழகத்தில் உள்ள 22,000 சக்திகேந்திரங்கள் மற்றும் 68,000 ஓட்டுச்சாவடிகளை ஒருங்கிணைக்கும் பணி இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலை பங்கேற்ற வீடியோ கான்பரன்சிங் கூட்டத்தில், இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
சக்திகேந்திர அமைப்புகளைச் சுறுசுறுப்பாக்க பிப்ரவரி 17 முதல் 28-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் தெருமுனைக் கூட்டங்களை நடத்த அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். தெருமுனைக் கூட்டங்களுக்கான நோட்டீஸ்களில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரின் புகைப்படங்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும்.
ஒரு சட்டமன்றத் தொகுதிக்குக் குறைந்தது 80 பேச்சாளர்களைப் பட்டியலிட வேண்டும். இந்தக் கூட்டங்களைச் சிறப்பாக நடத்த ஒவ்வொரு சக்திகேந்திரத்திற்கும் தனியாக உதவித்தொகை வழங்கப்படும்.
இந்தக் கூட்டங்களில் திமுக அரசுக்கு எதிரான முக்கிய அம்சங்களை மக்களிடம் கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதாவது, திமுக அரசின் ஊழல் புகார்கள். திருப்பரங்குன்றம் தீபத்தூண் பிரச்சனை. அந்தந்தத் தொகுதிகளில் நிலவும் உள்ளூர் பிரச்சனைகள் மற்றும் அடிப்படைத் தேவைகள்.
மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, அண்ணாமலைக்கு இந்த மாநில அளவிலான அதிகாரமிக்கப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் முழு வீச்சில் கட்சிப் பணிகளில் இறங்கியிருப்பது பாஜக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரும் 2026 தேர்தலை முன்னிட்டு அதிமுக - பாஜக கூட்டணி அடிமட்ட அளவில் வலுவாக இருப்பதை நிரூபிக்கும் முயற்சியாகவே இந்தத் தெருமுனைக் கூட்டங்கள் பார்க்கப்படுகின்றன.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்.
முதல்வர் மு க ஸ்டாலினுக்கு தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ஹரிஹரன் நன்றி...!!!!
தேனி மாவட்டத்தில் திமுக அரசை கண்டித்து மாஸ் காட்டிய அதிமுக....!!!
திமுக அரசை கண்டித்து முருக்கோடை ராமர் தலைமையில் ஆர்ப்பாட்டம்
அஞ்சி" ஆயிரம் கொடுப்பதா ? இபிஎஸ் காட்டம் !
மீண்டும் சர்ச்சை...! தவெக சேலம் கூட்டம்...! ஒருவர் உயிரிழப்பு...!