by Vignesh Perumal on | 2026-02-11 02:23 PM
திருவாரூரில் மனிதநேயத்தைப் போற்றும் விதமாக, 20 பவுன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரை கௌரவித்து "ஈர உள்ளம்" அமைப்பு தனது ஆறாம் ஆண்டு தொடக்க விழாவைக் கொண்டாடியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் "ஈர உள்ளம்" அமைப்பின் ஐந்தாம் ஆண்டு நிறைவு மற்றும் ஆறாம் ஆண்டு துவக்க நாள் விழா திருவாரூரில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவின் ஒரு பகுதியாக, சமீபத்தில் ஒட்டுமொத்த நகரத்தையும் நெகிழச் செய்த தூய்மைப் பணியாளர் துரை அவர்களுக்குச் சிறப்புப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருவாரூர் நகராட்சித் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து வரும் துரை, கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையில் கிடந்த ஒரு பையை கண்டெடுத்தார். அதில் திருமண சீர்வரிசைக்காக வாங்கப்பட்ட 20 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் இருந்தன.
பொருளாதார ரீதியாக எளிய சூழலில் இருந்தாலும், அந்த நகைகளைத் தனது நேர்மையால் உரியவரிடம் சேர்க்க முடிவெடுத்த துரை, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி K. கலைவாணன், காவல்துறை ஆய்வாளர், நகரமன்றத் தலைவர் மற்றும் ஆணையர் ஆகியோர் முன்னிலையில் அவற்றை முறையாக ஒப்படைத்தார். இவரின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டைப் பெற்றது.
இந்த மனிதநேயமிக்கச் செயலைப் பாராட்டும் விதமாக, ஈர உள்ளம் அமைப்பின் நிறுவனத் தலைவர் V.M. அண்ணாதுரை தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. நகரச் செயலாளர் சகோதரர் வாரை S. பிரகாஷ் முன்னிலை வகித்தார். மேலும், பங்கேற்ற முக்கியப் பிரமுகர்கள், நகரமன்ற உறுப்பினர் ரஜினி சின்னா, காங்கிரஸ் கமிட்டி நகரத் தலைவர் VKS அருள், அறநெறி லயன்ஸ் சங்க CEO ராஜ்குமார், மின்சார வாரிய கணக்காயர் சங்க மாவட்டச் செயலாளர் தனசேகர், அமைப்பின் இணைச் செயலாளர் அஜித்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
பண்பாளர் துரை அவர்களின் நேர்மையைப் போற்றும் வகையில், அவருக்குப் பரிசுப் பொருட்கள் மற்றும் ஊக்கத் தொகை வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. "அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் நகையை ஒப்படைத்து முன்மாதிரியாகத் திகழும் துரை போன்றவர்களே இந்தச் சமூகத்தின் நிஜமான நாயகர்கள்" என விழாவில் பங்கேற்றவர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பல்வேறு ஏழை எளிய மக்களுக்கு உதவி வரும் "ஈர உள்ளம்" அமைப்பு, தனது ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இதே நன்னாளில் நேர்மையைக் கொண்டாடியது அந்த அமைப்பின் பெயருக்கேற்றார் போல அமைந்தது.
செய்தி - சுப. இளங்கோ திருவாரூர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும் சோகம்...! கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே மரணம்...! பரிதவித்த 3 குழந்தைகள்...!
எச்சரிக்கை...! முனைவர் பட்டத்தில் முறைகேடு...! மாபெரும் வியாபாரம்..!
போலி பல்கலைக்கழகங்கள்...! அடையாளம் காண்பது எப்படி..? வழிகாட்டி நெறிமுறைகள்..!
ஈர உள்ளம்...! கொண்டாடும் பொதுமக்கள்...! கௌரவிக்கும் அமைப்பு...!
தேசிய குடற்புண் நீக்க உறுதிமொழி ஏற்பு......!!!!