| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

சட்டவிரோத லாட்டரி விற்பனை - "அதிர்ஷ்டம்" அவதிப்படும் ஏழைக் குடும்பங்கள் - அதிர்ச்சி ரிப்போர்ட் !

by satheesh on | 2026-02-10 11:47 AM

Share:


சட்டவிரோத லாட்டரி விற்பனை - "அதிர்ஷ்டம்"  அவதிப்படும் ஏழைக் குடும்பங்கள்  -  அதிர்ச்சி ரிப்போர்ட்  !

அதிர்ஷ்ட வேட்டையால் அவதிப்படும் ஏழைக் குடும்பங்கள்; கோடிகளை அள்ளிக்குவிக்கும் சட்டவிரோத லாட்டரி மாஃபியாக்கள்! தமிழகம் முழுவதும் தடையை மீறி நடக்கும் ரகசிய வியாபாரம்!   திடீர் பணக்காரர் ஆகிவிடலாம்' என்ற மாயக் கனவை விதைத்து, தினசரி உழைக்கும் பாமர மக்களின் பணத்தையும், நிம்மதியையும் உறிஞ்சும் சட்டவிரோத லாட்டரி வியாபாரம் தமிழகம் முழுவதும் கட்டுக்கடங்காமல் கொடிகட்டிப் பறக்கிறது. அரசால் தடை செய்யப்பட்டிருந்தும், 'மூன்று,நான்கு  நம்பர்' மற்றும் 'ஆன்லைன்' லாட்டரி சீட்டுகளால் பல்லாயிரக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் கடனிலும், வறுமையிலும் சிக்கித் தவிக்கின்றன. தினக்கூலிகளைக் குறிவைக்கும் 'அதிர்ஷ்டப் போதை'தமிழகத்தில் லாட்டரி விற்பனை 2003 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டபோதும், கேரள மாநில லாட்டரி முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட சட்டவிரோத லாட்டரி வியாபாரம் ரகசியமாக நடந்து வருகிறது. குறிப்பாக, தினசரி கூலி வேலை செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், சிறு வியாபாரிகள் போன்ற அடித்தட்டு மக்களே இந்த லாட்டரி மோகத்திற்குப் பலியாகின்றனர். ஒருநாள் அதிர்ஷ்டம் அடித்தால், மொத்த கடனையும் அடைத்து, வாழ்க்கையை மேம்படுத்தலாம் என்ற குருட்டு நம்பிக்கை அவர்களை இந்த போதைக்குள் தள்ளுகிறது. நூதன முறையில் நடக்கும் விற்பனை; கண்ணை மூடிய காவல்துறைலாட்டரி விற்பனையாளர்கள், காவல்துறையின் கண்ணில் படாமல் இருக்க, பல நூதன முறைகளைப் பயன்படுத்தி தங்கள் வியாபாரத்தை நடத்தி வருகின்றனர். சலூன் கடைகள் மற்றும் பெட்டிக்கடைகள்: பல இடங்களில், சிறிய சலூன் கடைகள் மற்றும் பெட்டிக்கடைகளில் ரகசியமாக 'மூன்று நம்பர்' லாட்டரி சீட்டுகளை எழுதி விற்பனை செய்கின்றனர். நடமாடும் விற்பனை: லாட்டரி ஏஜென்டுகள், சாலைகளில், பேருந்து நிலையங்களில், ஏன் வீதிகளில் நடந்து செல்பவர்கள் மத்தியிலும் சிறிய துண்டுச் சீட்டுகளில் நம்பர்களைக் குறித்துக் கொடுத்து விற்பனை செய்கின்றனர். ஆன்லைன் குழுக்கள்:

வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகக் குழுக்கள் மூலம் வெளிமாநில லாட்டரி முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, 'ஆன்லைன்' லாட்டரி விற்பனை நவீன வடிவம் எடுத்துள்ளது. முக்கிய மாவட்டங்களில் கொடிகட்டும் வியாபாரம்:  அரசின் அலட்சியம் இந்த சட்டவிரோத லாட்டரி விற்பனை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் குறிப்பாக, கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், தேனி மற்றும் பல மாவட்டங்களில் அதிக அளவில் நடைபெறுவதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த மாவட்டங்களில், கேரள மாநில எல்லைகள் அருகாமையில் இருப்பதும், தொழில் நகரங்கள் நிறைந்திருப்பதும் விற்பனைக்குச் சாதகமாக உள்ளது.எனினும், இத்தனைப் புகார்கள் வெளிவந்த பின்னரும், அரசு லாட்டரி விற்பனையைத் தடுக்கவோ அல்லது விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவோ போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. காவல்துறையின் கண்ணை மூடிய அலட்சியமும், அனைத்து அரசியல் கட்சியினரிடமும் அவர்களுக்கு இருக்கும் தொடர்புகளுமே இந்த வியாபாரம் தடையின்றி நடப்பதற்குக் காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சட்டத்திருத்தம் தேவை : ஆன்லைன் சூதாட்டம் போல் கடும் தண்டனை தேவை. லாட்டரி மோகத்தால், குடும்பச் செலவுகளுக்குப் பணம் கொடுக்க முடியாமல், கணவன்-மனைவிக்கிடையே சண்டை, குழந்தைகள் கல்வி பாதிப்பு, கடன் தொல்லைகள் எனப் பல சமூகப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. லாட்டரியில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை முயற்சிகளும் அதிகரிப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை  தெரிவிக்கின்றனர் .

சட்டவிரோத லாட்டரி விற்பனையை முழுமையாகக் கட்டுப்படுத்த, தமிழக அரசு தற்போதுள்ள சட்டத்தில் கடும் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டதைப் போலவே, லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் தொடர்ந்து ஈடுபடும் நபர்கள் மற்றும் அவர்களை ஈடுபடுத்தும் நபர்கள் மீது அதிகபட்ச அபராதம் விதிக்கும் வகையிலும் குண்டர்  தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும். இத்தகைய கடுமையான தண்டனைகள் வழங்குவதன் மூலம் மட்டுமே, சட்டவிரோத லாட்டரி மாஃபியாக்கள் மற்றும் அதற்குத் துணை போகும் ஊழியர்களை அச்சப்பட வைத்து, இந்த சமூக விரோதச் செயலை முடிவுக்குக் கொண்டு வர முடியும். தினமும் பல லட்சம் ரூபாய் லாபம் கொட்டும் இந்த லாட்டரி வியாபாரிகள், கைது செய்யப்பட்டாலும் மீண்டும் உடனடியாகத் தங்கள் தொழிலைத் தொடர்வது, சட்டம் ஒழுங்கு இயந்திரத்தின் மீதான கேள்விகளை எழுப்புகிறது. இதற்கு பல பத்திரிகையாளர் மற்றும்  சங்கங்கள் என்ற போர்வையில் இடைத்தரகர்களாக சட்ட விரோத லாட்டரி விற்பனையாளர்களுக்கு உதவுவதாகவும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர் சட்டவிரோத லாட்டரி விற்பனையை வேரறுக்கவும், பாமர மக்களை இந்த 'அதிர்ஷ்டப் போதையில்' இருந்து காப்பாற்றவும், காவல் துறையும், அரசும் இரும்புக்கரம் கொண்டு இந்த விவகாரத்தைக் கையாள வேண்டியது காலத்தின் கட்டாயம். தீபாவளி வரையிலாவது சட்டவிரோத மது விற்பனை மற்றும் லாட்டரி விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  இல்லையேல், தினசரி லாட்டரி சீட்டுகள் பல ஏழைக் குடும்பங்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளிவிடும் என்பது உறுதி.

இணை ஆசிரியர்  : N. சதீஷ்குமார்,  பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment