| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

என் ஊர் என் கனவு தொலைநோக்கு கருத்தரங்கு...!!!

by admin on | 2026-02-07 07:18 AM

Share:


என் ஊர் என் கனவு தொலைநோக்கு கருத்தரங்கு...!!!


தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில்  நேற்று என் ஊர் என் கனவு திட்டத்தின் கீழ் தொலைநோக்கு தேனி 2030-ஐ மையப்பொருளாகக் கொண்டு   மாவட்டத்தின் வளர்ச்சியில் பங்களிப்பினை அளிக்கும் வகையில் தொலைநோக்கு திட்டங்களைக் கொண்ட தனிநபர்கள், மக்கள் பிரதிநிதிகள், இளம்தலைவர்கள், துறைசார்ந்த வல்லுநர்கள், உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், வணிகர்கள், சங்கப்பிரதிநிதிகள், தொண்டு நிறுவனர்கள்,  சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோரிடம் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை கேட்டறிந்து இலக்கு-2030  உத்திகள் மற்றும் செயல்திட்டங்கள் தயாரிப்பதற்கான மாவட்ட அளவிலான கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள்  தலைமையில், தேனி பாராளுமன்ற உறுப்பினர் திரு.தங்க தமிழ்செல்வன் அவர்கள், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.சரவணகுமார் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.   

      இக்கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,        

  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.  மேலும், ஒவ்வொரு  மாவட்டத்திற்கும் தொலைநோக்கு திட்டங்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக என் ஊர் என் கனவு என்ற புதிய திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்கள்.

ஒரு மாவட்டத்தின் உண்மையான வளர்ச்சி என்பது தற்போதைய தேவைகளை மட்டும் பூர்த்தி செய்வதில் அல்ல, எதிர்காலத் தலைமுறைகளின் நலனைத் திட்டமிடும் தொலைநோக்கு பார்வையில்  உள்ளது.  இந்த தொலைநோக்கு பார்வையே மாவட்டத்தின் நிலையான, சமநிலை மற்றும் முழுமையான வளர்ச்சிக்கான அடித்தளம் ஆகும்.மக்கள்தொகை உயர்வு, காலநிலை மாற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றை கருத்தில் கொண்டு, நீண்டகால திட்டங்களை உருவாக்கி தேனி மாவட்டத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நோக்கத்தில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 

எனவே,  மாவட்டத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியினை மையாகக் கொண்டு  மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், வணிகர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு நிறுவனத்தாரிடமிருந்து பெறப்பட்ட ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் அனைத்தையும் தொகுத்து, செயல்திட்டமாக தயார் செய்து அரசுக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். 


அதனைத் தொடர்ந்து,  தேனி மாவட்டத்தில்  சிறந்த கட்டமைப்புகளை உருவாக்கவும்,  தொழில்வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்டிடவும் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்,  விவசாயம், குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், மதிப்புக்கூட்டுத் தொழில்கள் ஆகியவற்றை வலுப்படுத்துதல், கல்வி வளர்ச்சி, வேலைவாய்ப்புகளை அதிகரித்தல்,  இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு, பெண் தொழில்முனைவோருக்கு ஊக்கம் அளித்தல், சுயதொழில் வாய்ப்புகளை விரிவாக்குதல், சுகாதார வசதிகள், நீர் வள பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு, கழிவு மேலாண்மை, பசுமை பரப்பளவு அதிகரித்தல், போக்குவரத்து வசதியினை  மேம்படுத்துதல்,  பெண்கள், குழந்தைகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பின்தங்கிய சமூகங்களின் மேம்பாடு,  சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவைகள் குறித்து  மக்கள் பிரதிநிதிகள், இளம்தலைவர்கள், துறைசார்ந்த வல்லுநர்கள், உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், வணிகர்கள், சங்கப்பிரதிநிதிகள், தொண்டு நிறுவனர்கள்,  சமூக செயல்பாட்டாளர்கள்  மற்றும் அரசு அலுவலர்களிடமிருந்து  கருத்துக்கள் கேட்டறிப்பட்டது.   

பின்னர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை,  வனத்துறை,  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் சார்பில் தொலைநோக்கு தேனி-2030 செயல்திட்டம்  குறித்து  சம்பந்தப்பட்ட  துறை அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்தனர். 

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.பி.சினேஹாப்பிரியா, இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.ராஜகுமார்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி தமிழரசி, பெரியகுளம் சார் ஆட்சியர் திரு.ரஜத்பீடன், இ.ஆ.ப., மாவட்ட வன அலுலவர்  திரு.ஜி.கிரண்,  இ.வ.ப.,  உதவி வனப்பாதுகாவலர் திரு.சாய்சரண் ரெட்டி, இ.வ.ப., உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் திரு.செய்யது முகமது, வன அலுவலர் (பயிற்சி) திரு.புவனேஷ், இ.வ.ப., நகர்மன்றத் தலைவர்கள் திருமதி ரேணுபிரியா பாலமுருகன் (தேனி-அல்லிநகரம்), திருமதி சுமிதா சிவக்குமார் (பெரியகுளம்), திருமதி அய்யம்மாள் ராமு (சின்னமனூர்), திருமதி ராஜராஜேஸ்வரி சங்கர் (போடிநாயக்கனூர்), பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் அனைத்துத் துறை மாவட்ட  நிலையிலான அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர்   கலந்து கொண்டனர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment