by admin on | 2026-01-25 09:31 PM
தேனியில் 16 –ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில், இன்று (25.01.2026) 16-ஆவது தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களிடையே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடமாடும் மாதிரி விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இன்றைய தினம் “My India, My Vote” என்ற கருத்துருவுடன் 16-ஆவது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது.ஜனநாயகம்” என்ற சொல் இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிறது. கி.பி.10-ஆம் நூற்றாண்டிலேயே, தமிழ்நாட்டின் கிராமங்களில், குறிப்பாக பிற்காலச் சோழர் காலத்தில், மக்கள் தங்களுக்கான நிர்வாகத்தைத் தாங்களே தேர்வு செய்தனர் என்பதே குடவோலை முறையின் பெருமை. இன்றைக்கு நாம் தேர்தல், வாக்குப்பதிவு, மக்கள் பிரதிநிதித்துவம் என்று பேசுகிறோம். ஆனால், அதற்கெல்லாம் அடித்தளமாக இருந்தது இந்த குடவோலை முறை. கிராம நிர்வாகப் பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க, மக்கள் தங்களின் விருப்பமான நபர்களின் பெயர்களை ஓலைகளில் எழுதி, அவற்றை ஒரு குடத்தில் (குடம்) போட்டு, அதிலிருந்து ஓலை எடுக்கும் முறையாகும் குடவோலை முறையின் மிகப்பெரிய சிறப்பு என்பது அதன் வெளிப்படைத்தன்மையாகும். இன்றைய தேர்தல் முறைகளில் நாம் பேசும் Transparency, Accountability, Good Governance என்ற சொற்கள், அந்தக் காலத்திலேயே தமிழகத்தில் நடைமுறையில் இருந்தன என்பது நமக்கெல்லாம் பெருமை தரும் ஒன்றாகும். குடவோலை சான்றாக இருப்பது காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் கல்வெட்டு. இக்கல்வெட்டில் தகுதிகள், தேர்வு நடைமுறைகள், பதவி காலம், தகுதி நீக்கம் செய்யப்படும் காரணங்கள் ஆகிய எல்லாம் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இது, தமிழர்களின் நிர்வாக அறிவிற்கு அழியாத சான்றாக உள்ளது. குடவோலை முறையினை ஒரு வரலாறாக மட்டும் பார்க்கால், அதனை ஒரு வழிகாட்டியாக கொண்டு இன்றைய தலைமுறையினர் வருகின்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுதேர்தல் 2026 –இல் தங்களது வாக்குப்பதிவினை 100% உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தங்களது வாக்குரிமையை உறுதி செய்து கொள்வதற்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை வாக்காளர்கள் பயன்படுத்தி தங்களது படிவங்களை பூர்த்தி செய்து தங்களது வாக்குரிமையை உறுதி செய்து கொள்ள வேண்டும். 18-வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும். ஒவ்வொரு தேர்தலின் போது அனைவரும் தங்களது வாக்குரிமையை செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், இதுகுறித்து தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும், பதிவு செய்தவர்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியிலில் இடம்பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். மேலும், தேசிய வாக்காளர் விழிப்புணர்வு குறித்து நடத்தப்பட்ட ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்ற 3 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, தேனி மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் சிறப்பு தீவிரத்திருத்தம் 2026 - இல் சிறப்பாக பணியாற்றிய வாக்களார் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் கண்காணிப்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். முன்னதாக, பொதுமக்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் மின்னல் கலைக்குழுவினரின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.ராஜகுமார் பெரியகுளம் சார் ஆட்சியர் திரு.ரஜத்பீடன், இ,ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.பஞ்சாபகேசன், நகராட்சி ஆணையாளர்கள் செல்வி பார்கவி(தேனி-அல்லிநகரம்), திரு.உமா சங்கர்(கம்பம்), திரு.கோபிநாத் (சின்னமனூர்), திருமதி முத்துலட்சுமி(கூடலூர்), செல்வி தமீஹா சுல்தானா (பெரியகுளம்), வட்டாட்சியர்கள் திரு.சுருளி(தேர்தல்), திரு.மருதுபாண்டி(பெரியகுளம்), திரு.கண்ணன்(உத்தமபாளையம்), திரு.சந்திரசேகரன்(போடிநாயக்கனூர்) மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முதல்வரின் இளைஞர் விளையாட்டு விழா..!! கலெக்டர் ரஞ்ஜீத் சிங் துவக்கி வைத்தார்....!!
உலகம் உங்கள் கையில் திட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்..!!
ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி..! ஓபிஎஸ் அதிரடி பேட்டி...!
அமைச்சர் ஐ. பெரியசாமி..! அமலாக்கத்துறை...! ரத்து செய்ய மறுப்பு..!
விதி மீறும் வாகனங்கள் - கன்னியாகுமரி எஸ்.பி கடும் எச்சரிக்கை !