by Vignesh Perumal on | 2025-12-30 02:36 PM
ஒடிசா மாநிலம் தியோகர் மாவட்டத்தில், தற்கொலை செய்துகொண்ட பெற்றோரின் உடல்களுக்கு அருகிலேயே 5 வயது சிறுவன் ஒருவன் இரவு முழுவதும் வனப்பகுதியில் தவித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தியோகர் மாவட்டம் ஜியானந்தபலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் துஷ்மந்த் மஜ்ஹி மற்றும் அவரது மனைவி ரிங்கி மஜ்ஹி. இத்தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான். கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று இருசக்கர வாகனத்தில் வெளியே சென்ற தம்பதியினர், வரும் வழியில் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளனர். சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு, வனப்பகுதிக்குள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அங்கு விஷம் அருந்தியுள்ளனர்.விஷம் அருந்திய சிறிது நேரத்திலேயே தந்தை துஷ்மந்த் பரிதாபமாக உயிரிழந்தார். தாய் ரிங்கி மயக்கமடைந்த நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இதையறியாத 5 வயது சிறுவன், தனது பெற்றோர் தரையில் கிடப்பதைப் பார்த்துக் கொண்டே, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் அருகிலேயே இரவு முழுவதும் அமர்ந்திருந்துள்ளான்.வனவிலங்குகளின் நடமாட்டம் மற்றும் உறைய வைக்கும் குளிருக்கு இடையே, விடிய விடியத் தனது தந்தை எழுவார் என்ற நம்பிக்கையில் அந்தச் சிறுவன் அங்கேயே தங்கியிருந்தது காண்போரை நிலைகுலையச் செய்துள்ளது.ஞாயிற்றுக்கிழமை காலை சூரிய உதயத்திற்குப் பிறகு, அந்தச் சிறுவன் வனப்பகுதியிலிருந்து மெதுவாக நடந்து சாலைக்கு வந்துள்ளான். அங்கு அவ்வழியாகச் சென்ற வழிப்போக்கர்களிடம் அழுதுகொண்டே உதவி கேட்டுள்ளான். சிறுவன் கூறிய தகவலின் பேரில் வனப்பகுதிக்குச் சென்ற மக்கள், உயிரிழந்த தந்தை மற்றும் உயிருக்குப் போராடிய தாயை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாய் ரிங்கி, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் பலனின்றி உயிரிழந்தார். விசாரணையில், பெற்றோர்கள் தங்களது மகனுக்கும் விஷம் கொடுத்திருந்தது தெரியவந்தது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக அந்தச் சிறுவன் உயிர் பிழைத்துள்ளான்.இது குறித்து தியோகர் காவல் அதிகாரி தீரஜ் கூறுகையில், "சிறுவன் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறான். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அவன் தனது தாத்தா - பாட்டியிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டான். இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" எனத் தெரிவித்தார். தன்னலம் கருதி தற்கொலை முடிவெடுத்த பெற்றோர்களால், ஒரு பிஞ்சு குழந்தை அனுபவித்த அந்த ஒரு இரவு நேரத் துயரம் அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கொடைக்கானலில் வாகனங்கள் நுழைய 12 மணி நேரம் தடை...!
பள்ளிவாசலில் முறைகேடு - ஊழியர் தற்கொலை - போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை - நாகர்கோயிலில் பரபரப்பு. !
புத்தாண்டு கொண்டாட்டம் - சென்னையில் போக்குவரத்து மாற்றம் - போலீஸ் அதிரடி ;
செல்போனில் பேசினால்..??? அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள் மீது நடவடிக்கை...????
ஐ ஏ எஸ் அதிகாரிகள் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு :