| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

5-வது நாள் போராட்டம்...! ஆசிரியர்கள் அதிரடி கைது...!

by Vignesh Perumal on | 2025-12-30 11:56 AM

Share:


5-வது நாள் போராட்டம்...! ஆசிரியர்கள் அதிரடி கைது...!

சென்னையில் தங்களது வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர்களை, இன்று 5-வது நாளில் போலீசார் கைது செய்துள்ளனர். 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற ஒற்றை இலக்கை நோக்கித் தங்களது போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.சென்னை எழும்பூரில் உள்ள பள்ளிக்கல்வி வளாகம் (DPI) அருகே, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில் கடந்த 5 நாட்களாகத் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர். இரவு பகலாகப் பணியிடத்திலேயே அமர்ந்து அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.ஆசிரியர்களின் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் பல ஆண்டுகால ஊதிய முரண்பாடு உள்ளது. 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்பு சேர்ந்தவர்களுக்கும் இடையே ஊதியத்தில் பெரும் இடைவெளி உள்ளது.bஒரே தகுதி, ஒரே வேலை என்ற போதும், சுமார் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை ஊதிய வித்தியாசம் நிலவுவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில், வாக்குறுதி எண் 311-ல், "இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்பட்டு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும்" எனத் தெரிவித்திருந்தது. ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையிலும், இந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பது போராட்டக்காரர்களின் பிரதான குற்றச்சாட்டாகும். இன்று காலை 5-வது நாளாகப் போராட்டம் தொடர்ந்த நிலையில், காவல்துறையினர் போராட்டத்தைக் கைவிடுமாறு ஆசிரியர்களை வற்புறுத்தினர். ஆனால், "அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய அறிவிப்பை வெளியிடும் வரை நகர மாட்டோம்" என ஆசிரியர்கள் உறுதியாக நின்றனர்.இதனையடுத்து, எழும்பூர் பகுதியில் குவிக்கப்பட்ட போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான ஆசிரியர்களைப் பலவந்தமாக அள்ளிச் சென்று பேருந்துகளில் ஏற்றி கைது செய்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். "நாங்கள் பிச்சை கேட்கவில்லை, எங்களது உரிமையைக் கேட்கிறோம். தேர்தல் வாக்குறுதியை நம்பி ஓட்டுப் போட்ட எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. கைது நடவடிக்கைகளால் எங்களது போராட்டத்தை முடக்க முடியாது" என ஆசிரியர்கள் ஆவேசமாகத் தெரிவித்தனர்.


இந்தப் போராட்டத்தால் எழும்பூர் பகுதியில் இன்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, ஒருவிதப் பதற்றமான சூழலும் நிலவியது. தமிழக அரசு இந்தப் பிரச்சனையில் தலையிட்டு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment