by Vignesh Perumal on | 2025-06-02 04:29 PM
சிக்கிம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக சாட்டென் மற்றும் லாச்சங் பகுதிகளில் கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலச்சரிவுகளால் சாட்டெனில் உள்ள ஒரு ராணுவ முகாம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்ட 4 வீரர்கள் சிறிய காயங்களுடன் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால், அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த தொடர் கனமழையே நிலச்சரிவுக்கு முக்கிய காரணம். லாச்சென் ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததும், சாட்டென் ராணுவ முகாம் அருகே நிலச்சரிவு ஏற்பட ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
காணாமல் போன ராணுவ வீரர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் மீட்பு குழுக்கள் சவாலான சூழ்நிலையில் 24 மணி நேரமும் ஈடுபட்டு வருகின்றன. கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மீட்புப் பணிகள் சவாலாக அமைந்துள்ளன.
கடந்த மே 30 முதல் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக லாச்சுங் பகுதியில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சிக்கியிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு சாலைகளில் இருந்த பாறைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்ட நிலையில், திங்கள்கிழமை காலை 1,600 சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.