by Vignesh Perumal on | 2025-04-02 04:12 PM
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இருந்து ஆந்திரப் பிரதேசம் திருப்பதிக்கு மீண்டும் பேருந்து சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சில நாட்களுக்கு முன் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்திருந்தார். குறிப்பாக, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண், தனது மகன் அகிரா நந்தனுடன் வந்தார். பழநி அடிவாரத்திலிருந்து ரோப் காரில் மலைக்கோயிலுக்கு வந்தார்.
அங்கு இணை ஆணையர் மாரிமுத்து, துணை முதல்வரைப் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். உச்சி கால பூஜையில் கலந்து கொண்டு துணை முதல்வர் தனது மகனுடன் தண்டாயுதபாணி சுவாமியைத் தரிசனம் செய்தார். அவருக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் முருகன் படம், பிரசாதம் அளிக்கப்பட்டது. பழநி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: "பழநியில் இருந்து திருப்பதிக்கு மீண்டும் பேருந்து சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல், பழநியிலிருந்து திருப்பதிக்கு ரயில் சேவை தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்துவேன்.
தமிழ்நாட்டு மக்களின் அன்பு என்னை நெகிழ வைத்துள்ளது. திருப்பதி லட்டு நெய் விவகாரத்தில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். கடவுள் விஷயத்தில் யாரும் இப்படி பண்ணக்கூடாது. ஆன்மிக யாத்திரை சந்தோஷமாக உள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்க வழிபாடு செய்துள்ளேன்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது பழநியில் இருந்து திருப்பதிக்கு மீண்டும் பஸ் சேவை தொடங்க ஆந்திர அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்து அதற்கான அறிவிப்பு வெளியானது.