| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் Congress

பிரதமர் மோடி வருகை...! காங்கிரஸ் நூதன எதிர்ப்பு...! எதுக்கு தெரியுமா..?

by Vignesh Perumal on | 2025-04-02 07:45 AM

Share:


பிரதமர் மோடி வருகை...! காங்கிரஸ் நூதன எதிர்ப்பு...! எதுக்கு தெரியுமா..?

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தை ஏப்ரல் 6 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளதால் ராமேஸ்வரம் பகுதி தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் விழா பந்தல் அமைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ராமநவமியான அன்று பிரதமர் மோடி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சிறப்பு தரிசனம் மேற்கொள்ள உள்ளார்.

அதைத்தொடர்ந்து, திறப்பு விழா நிகழ்ச்சி கூட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு அரசு தங்கும் விடுதி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்காக விழா பந்தல், மேடை அமைக்க பிரம்மாண்ட இரும்பு சட்டங்கள்,வெப்ப சலனத்தை தாங்கும் கூரைகள் லாரிகளில் கொண்டு வந்து இறக்கப்பட்டு பந்தல் அமைக்கும் பணியில் ஊழியர்கள் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, ஏப்ரல் 5 ஆம் தேதி இலங்கை செல்லும் பிரதமர் மோடி ஏப்ரல் 6 ஆம் தேதி சிறப்பு விமானத்தில் மதுரை புறப்படுகிறார். அதன்பின் ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் அருகே மண்டபம் வருகிறார். அங்கிருந்து காரில் ராமேஸ்வரம் வருகிறார். இதற்காக மண்டபம் ஹெலிபேட் தளத்தில் சிமென்ட் கலவை பூசி புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி எதிரிகள் ஊடுருவலை தடுக்க சில நாட்களாக பாக்ஜலசந்தி கடல், மன்னார் வளைகுடா கடலில் இந்திய கடற்படை, கடலோர காவல் படை வீரர்கள் ரோந்து கப்பலில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னான்டோ வெளியிடுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2025 மார்ச் மாதம் வரையிலும் 10 ஆண்டுகளில் 480 படகுகள் கைப்பற்றப்பட்டு 3,800 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரியில் இருந்து மார்ச் மாதம் வரையிலுமான மூன்று மாதத்தில் மட்டும் 21 படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு 159 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த 6 ஆண்டுகளில் சுமார் 185 படகுகளை இலங்கை நீதிமன்றங்கள் நாட்டுடமையாக்கி உள்ளன. நாட்டுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்து விறகுகளாகவும், இயந்திரங்களை பழைய இரும்பு கடைகளுக்கும் யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யப்பட்டும் வருகின்றன. கடந்த காலங்களை விட, தற்போது இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்வது அதிகரித்துள்ளதுடன், மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுகிறது. இது தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும் பதட்டத்தையும் உருவாக்கி உள்ளது.


ஆனால், கடந்த 11 ஆண்டு கால பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக ஆட்சியில் கடந்த மூன்று நாடாளுமன்ற தேர்தல்களில் அளிக்கப்பட்ட மீனவர் நலனுக்கன தனி அமைச்சகம், மீன்பிடித் தொழிலை, மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்றி, இந்திய நாட்டில் வாழும் பாரம்பரிய மீனவச் சமுதாயத்தை பழங்குடியினராக அங்கீகத்தல், புயல், பெருமழை, சூறாவளி, சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களின்போது விவசாயிகளின் வங்கி கடன்களை மத்திய மாநில அரசுகள் தள்ளுபடி செய்யும்போது மீனவர்களின் தொழில் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

ஏப்ரல் 4 அன்று இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மற்றும் புதுச்சேரி மாநில மீனவர்களை விடுதலை செய்யவும், கைப்பற்றப்பட்ட மீனவர்கள் படகுகளை நிபந்தனையின்றி விடுவிக்கவும், இரு நாட்டு மீனவ பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையை நடத்திடவும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்திட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை பிரதமர் மோடியும், மத்திய அரசும் நிறைவேற்றி தராதபட்சத்தில், புதிய பாம்பன் பாலத்தை திறப்பதற்காக ராமேஸ்வரத்துக்கு ஏப்ரல் 6-ம் தேதி வருகை தரும், பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பாக, மீனவர்களை திரட்டி கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அகில இந்திய மீனவர் காங்கிரஸ், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் நிர்வாகிகள், தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளார்கள்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment