by Vignesh Perumal on | 2026-04-07 12:53 PM
திண்டுக்கல் அருகே சென்னம்மநாயக்கன்பட்டி பகுதியில் ரத்தக் காயங்களுடன் மீட்கப்பட்ட ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இது கொலையா அல்லது விபத்தா என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விகாஸ். இவர் திண்டுக்கல் அருகே தங்கி கூலி வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. திண்டுக்கல்லை அடுத்த சென்னம்மநாயக்கன்பட்டி பகுதியில் விகாஸ் உடல் முழுவதும் பலத்த ரத்தக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாகத் தாடிக்கொம்பு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விகாஸை மீட்டு உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விகாஸுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், அவரது உடலில் இருந்த காயங்கள் ஆழமாக இருந்ததாலும், அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டதாலும் சிகிச்சை பலனின்றி இன்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விகாஸின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால், ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் இது குறித்து சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளார்.
விகாஸின் உடலில் இருந்த காயங்கள் ஏதேனும் ஆயுதங்களால் தாக்கப்பட்டதா அல்லது வாகன விபத்தினால் ஏற்பட்டதா என்பது குறித்து உடற்கூறு ஆய்வு அறிக்கைக்குப் பிறகே தெரியவரும். அவர் எங்கு வேலை செய்து வந்தார்? அவருடன் தங்கியிருந்த மற்ற வடமாநில நண்பர்கள் யார்? என்பது குறித்துப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் காயங்களுடன் கிடந்த சென்னம்மநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளைப் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் சமீபகாலமாக வடமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற மர்ம மரணங்கள் தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விகாஸின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கத் தேவையான நடவடிக்கைகளைத் தாடிக்கொம்பு போலீஸார் எடுத்து வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
முதியவர் கல்லால் அடித்துக் கொலை..!வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு..!
முதியவர் கல்லால் அடித்துக் கொலை..!வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு..!
பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு...! கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து..! 10 பேர் காயம்..!
2 விஜய், 2 ஜோசப்...! சுவாரஸ்யமான தேர்தல் களம்...!
2 விஜய், 2 ஜோசப்...! சுவாரஸ்யமான தேர்தல் களம்...!