by admin on | 2026-02-08 12:19 PM
தமிழக அரசியலில் ‘அடிமை’ என்ற சொல் புதிதல்ல. எதிரணியை விமர்சிக்க எளிதாகப் பயன்படுத்தப்படும் இந்தச் சொல்லுக்கு அரசியல் மேடைகளில் கைதட்டல் கிடைக்கலாம். ஆனால் ஒரு கட்சி உண்மையில் அடிமையா, இல்லையா என்பதை தீர்மானிப்பது உரைகளால் அல்ல; அதன் அரசியல் நடைமுறைகள், முடிவெடுக்கும் இடங்கள், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில்தான்.
அதிமுக-பாஜக உறவை முன்வைத்து, ‘டெல்லிக்கு அடிமை’, ‘முரட்டு அடிமை’ என திமுக தரப்பில் இருந்து தொடர்ந்து கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற
கடந்த ஒரு தசாப்தமாக ‘ அடிமை’ போன்ற சொற்கள் அரசியலை விவரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அரசியல் வரலாறு, இந்தக் குற்றச்சாட்டுகளை அப்படியே ஏற்றுக்கொள்ளாது.
அதிமுக-பாஜக கூட்டணி திடீரென உருவான ஒன்றல்ல. 1998ஆம் ஆண்டிலிருந்து, இந்த உறவு அரசியல் தேவைக்கு ஏற்ப இணைந்தும், பிரிந்தும், மீண்டும் சேர்ந்தும் வந்துள்ளது. இந்திய அரசியலில் இது அபூர்வமானதல்ல.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் இந்த கூட்டணி முறிந்தபோது, அது நிரந்தரப் பிரிவாகத் தோன்றியது. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், அரசியல் கணக்குகள் தங்கள் வழியை மாற்றின. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து, அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் இணைந்தது. இது கூட்டணி அரசியலில் ‘உறவு’ அல்ல; ‘தேவை’தான் முடிவெடுக்கும் என்பதற்கான நினைவூட்டல்.
இந்த அரசியல் நகர்வுகளின் பின்னணியில், எண்கள் என்ன சொல்கின்றன என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக போட்டியிட்ட தொகுதிகளில் 22 சதவீத வாக்குகளைப் பெற்றது. பாஜக கூட்டணியாகப் போட்டியிட்ட இடங்களில் 18.3 சதவீத வாக்குகள் கிடைத்தன. இந்த எண்ணிக்கைகள், ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்தும் உறவு அல்ல; பரஸ்பர சார்பு கொண்ட அரசியல் அமைப்பே செயல்படுகிறது என்பதையே வெளிப்படுத்துகின்றன. 2024 பாராளுமன்றத் தேர்தலில் இவர்கள் இணைந்து தேர்தலை சந்தித்து இருந்தால் 40க்கு 22 தொகுதிகள் வெற்றி கிடைத்திருக்கும் அப்போதே.... இப்போது திமுக மீதுள்ள அதிருப்தியில் இவர்களின் பலம் இன்னும் கூடி இருக்கிறது.
ஆனால், திமுக கூட்டணிக்குள் வெளிப்படையாக ஒலிப்பது ஒரே கோரிக்கை. அது, அதிகாரத்தில் பங்கு. முந்தைய காலங்களில் அந்த வாய்ப்பை தவறவிட்டதாகவும், 2026இல் அதனை சாத்தியமாக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. அந்தக் கோரிக்கை இப்போது கூட்டணியின் மைய விவாதமாக மாறியுள்ளது. ஆனால் இந்த அழுத்தத்திற்கு திமுக தரப்பில் இருந்து தெளிவான சம்மதம் இன்னும் வெளிப்படவில்லை. இந்த மௌனமே, கூட்டணிக்குள் நடக்கும் பேச்சுவார்த்தைகள் எவ்வளவு நுணுக்கமானவை என்பதைக் காட்டுகிறது.
இந்த நெருடலுக்கு மத்தியில்தான், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி, ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்து பேசினார். கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து அந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மாநில அரசியல் முடிவுகள் சென்னையில் அல்லாமல், டெல்லியில் விவாதிக்கப்பட வேண்டிய நிலை ஏன் உருவாகிறது என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிறது.
ராகுல் காந்தியை அறிவாலயம் வரச் சொல்லி பேச முடியாத நிலை ஏன்? அமித் ஷா சென்னை வந்தபோது, அதிமுகவுடன் கூட்டணி அறிவிப்பு இங்கேயே வெளியானதே. அப்படியானால், இப்போது திமுக ஏன் டெல்லிக்குச் செல்ல வேண்டும் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.
இந்த டெல்லி அரசியல் காட்சிகளை வாக்காளர் எப்படி பார்க்கிறான் என்பதும் முக்கியம். மாநில அரசியல் முடிவுகள் சென்னையில் எடுக்கப்பட வேண்டுமா, அல்லது டெல்லி அனுமதியோடு மட்டுமே நகர வேண்டுமா என்ற கேள்வி, வெறும் கட்சி அரசியல் விவாதம் அல்ல; மாநில சுயநிர்ணயத்தின் அடிப்படை கேள்வி.
கூட்டணி அரசியல் என்பதற்கும், முடிவெடுக்கும் அதிகாரம் வேறொரு மையத்துக்குச் செல்வதற்கும் உள்ள வித்தியாசத்தை பொதுமக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
இந்த நடைமுறை இன்று மட்டும் தொடங்கியதல்ல. இதற்கான பதிலைத் தேட, அரசியல் நினைவுகள் ஒரு தசாப்தத்திற்கு பின்னோக்கிச் செல்கின்றன. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பிப்ரவரி-மார்ச் மாதங்களில் தமிழக அரசியல் களம் அக்னி வெயிலைவிட உக்கிரமாக இருந்தது. மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், திமுக மீது அரசியல் அழுத்தத்தை அதிகரித்தது. ‘மத்திய அரசு எங்களிடமே உள்ளது; உங்கள் மீது வழக்குகள் உள்ளன’ என்ற தொனியில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நகர்ந்தன.
அண்ணா அறிவாலயத்தில் ஒருபுறம் தொகுதி பங்கீடு பேசப்பட்டுக் கொண்டிருக்க, அதே கட்டிடத்தின் மேல் மாடியில் சிபிஐ, ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக ரெய்டு நடத்தியது திமுகவை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
“மேலே ரெய்டு, கீழே கூட்டணி பேச்சுவார்த்தை” என்ற சொற்றொடர் அப்போது அரசியல் அரங்கில் பேசப்பட்டது. அந்த ரெய்டுக்குப் பிறகு, இரண்டு நாட்களுக்குள் அதே அறிவாலயத்தில் திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெற்றது.
கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்ற அளவுக்கு காங்கிரஸ் குரலை உயர்த்தியது. இறுதியில், காங்கிரஸ் விரும்பியபடி 63 தொகுதிகளை வழங்க வேண்டிய நிலைக்கு திமுக தள்ளப்பட்டது. அது அரசியல் உடன்பாடா, அல்லது அழுத்தத்தின் விளைவா என்ற கேள்வி, இன்றும் விவாதத்தில்தான் உள்ளது.
கச்சத்தீவு முதல் முள்ளிவாய்க்கால் துயரம் வரை, டெல்லி அரசியலுடன் திமுக கொண்ட நீண்டகால உறவு ஏற்கனவே பல அரசியல் கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், இன்றைய டெல்லி சந்திப்புகளும் அதே தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகின்றன.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், இவ்வாறு நீடிக்கும் அரசியல் நகர்வுகள் திமுக கூட்டணிக்குள் அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும். தொகுதி பங்கீடு, அதிகாரப் பங்கு, டெல்லி ஒப்புதல் போன்ற விவகாரங்கள் ஒரே நேரத்தில் மேசைக்கு வரும்போது, முடிவெடுக்கும் மையம் எங்கு இருக்கிறது என்ற கேள்வி மீண்டும் எழும். அந்தக் கேள்விக்கான பதில்களே, வரும் மாதங்களில் தமிழக அரசியல் களத்தின் திசையை நிர்ணயிக்கும்.
இந்த வரலாற்றுப் பின்னணியுடன் பார்த்தால், இன்றைய டெல்லி சந்திப்புகளும் கூட்டணி குழப்பங்களும் தனித்தனியாகத் தோன்றுவதில்லை. அதிமுகவும் பாஜகவும் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கின்றன; ஒருவர் மற்றொருவருக்கு அடிமை அல்ல.
அதிமுக அடிமை கட்சி என்றால், அது டெல்லிக்கு அல்ல; அதிமுக உள்பட எல்லா கட்சிகளும் மக்களுக்கே அடிமையாக இருக்க வேண்டும். மக்களை எஜமானர்களாகக் கருதி, அவர்களின் வாக்குகளுக்கு அடிமையாக இருப்பதே ஜனநாயக அரசியல்.
ஆனால் சென்னையில் முடிவெடுக்க முடியாமல், டெல்லியில் அனுமதி பெற்ற பிறகே அரசியல் நகரும் நிலை உருவாகியிருந்தால், அந்த அரசியலை வேறு எந்தச் சொல்லால் விவரிக்க முடியும்?
டெல்லிக்கு திமுக அடிமை என்று சொல்லப்படுகிற நிலையில், உண்மையில் அந்த அடிமைத்தனம் ஏன் என்பதே, இன்றைய தமிழக அரசியலில் எழும் அடிப்படை கேள்வியாக மாறியுள்ளது.