| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் அரசியல்

சர்ச்சை பேச்சு...! விசிகவில் 20 பேர்தான்...! திருமாவளவனைச் சாடிய ஆதவ் அர்ஜுனா..!

by Vignesh Perumal on | 2026-01-25 04:28 PM

Share:


சர்ச்சை பேச்சு...! விசிகவில் 20 பேர்தான்...! திருமாவளவனைச் சாடிய ஆதவ் அர்ஜுனா..!

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உரையாற்றினார். அப்போது விசிக தலைவர் திருமாவளவனை விமர்சித்ததுடன், 2026 தேர்தல் களம் எம்.ஜி.ஆர் காலத்து அரசியல் மாற்றத்தைப் போன்றது என அதிரடியாகப் பேசினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தற்போதைய நிலை குறித்து ஆதவ் அர்ஜுனா முன்வைத்த விமர்சனம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

"திருமாவளவன் அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் என்னை (ஆதவ் அர்ஜுனாவை) திட்டிக் கொள்ளட்டும்; எனக்குக் கவலை இல்லை. ஆனால், உங்கள் கட்சி இங்கே மாறி எவ்வளவு நாள் ஆகிவிட்டது? இப்போது உங்கள் கட்சியில் நீங்களும் ஒரு 20 பேரும் மட்டும்தான் இருக்கிறீர்கள். மற்றவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்பது உங்களுக்கே தெரியும்" எனப் பேசினார்.

இதன் மூலம் விசிகவின் தற்போதைய செல்வாக்கு குறைந்துவிட்டதாகவும், அக்கட்சியின் தொண்டர்கள் தவெக நோக்கி வருவதாகவும் அவர் சூசகமாகத் தெரிவித்தார்.

கூட்டணி குறித்துப் பேசிய அவர், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அரசியல் வெற்றியை உதாரணமாகக் காட்டினார்.

"புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் கூட்டணி கட்சிகளை நம்பித் தனது கட்சியை உருவாக்கவில்லை. அவர் தாய்க்குலத்தை (பெண்கள்) நம்பிதான் கட்சியை ஆரம்பித்தார். அவர்களின் ஆதரவே அவரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது.

தமிழகத்தில் தற்போது 1977-ல் இருந்த அதே அரசியல் சூழல் நிலவுகிறது. மக்கள் இரண்டு திராவிடக் கட்சிகளையும் நம்பி 60, 70 ஆண்டுகள் ஏமாந்துவிட்டார்கள். இப்போது அவர்கள் ஒரு பெரும் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்."

தவெக-வின் தேர்தல் நிலைப்பாடு குறித்து அவர் பேசியபோது: "தவெக எந்தவொரு கூட்டணியையும் நம்பித் தொடங்கப்பட்ட கட்சி அல்ல. மக்களின் சக்தியை மட்டுமே நம்பிக் களமிறங்கியுள்ளோம். 1977-ல் எம்.ஜி.ஆருக்கு மக்கள் எத்தகைய ஆதரவை வழங்கினார்களோ, அதே போன்றதொரு எழுச்சி இப்போது தலைவர் விஜய் அவர்களுக்கு உருவாகியுள்ளது."

திமு-அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் காலாவதியாகிவிட்டன என்ற தொனியில் அவரது பேச்சு அமைந்திருந்தது.

ஆதவ் அர்ஜுனாவின் இந்தப் பேச்சு, குறிப்பாக விசிக-வை வம்புக்கு இழுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விசிக-வில் இருந்து வெளியேறி தவெக-வில் இணைந்தவர் என்பதால், திருமாவளவனுக்கும் இவருக்கும் இடையிலான மோதல் இப்போது கட்சி ரீதியான மோதலாக மாறியுள்ளது.

மேலும், விஜய் தனது உரையில் 'நட்பு சக்தி' குறித்துப் பேசியிருந்தாலும், ஆதவ் அர்ஜுனா 'தனித்து நின்று வெற்றி' பெறுவதையே எம்.ஜி.ஆர் உதாரணத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.









நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment