| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

எல் ஐ சி பெண் அதிகாரி எரித்து கொலை - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் !

by satheesh on | 2026-01-23 06:22 PM

Share:


எல் ஐ சி பெண் அதிகாரி எரித்து கொலை  - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம்  !

மதுரை எல்ஐசி பெண் மேலாளர் எரித்து படுகொலை;

பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திடு!

குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்கிடு! 

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல் . மதுரைமேல வெளி வீதியில் எல்.ஐ.சி. அலுவலகத்தில் முதுநிலை மேலாளர் கல்யாணி நம்பி அவர்கள் தீ விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட சம்பவம், தற்போது திட்டமிட்ட கொடூரக் கொலை என விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்திருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

அலுவலகத்தில் நடைபெற்ற ஆவண முறைகேடுகளை கண்டறிந்து, அதை உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்க முனைந்ததற்காக, சக ஊழியரான உதவி மேலாளர் ராம் என்பவர்   கல்யாணி நம்பி மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளார் என்பது  தற்போது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. நேர்மையும் திறமையும் தைரியமும் கொண்ட ஒரு பெண் அதிகாரி, முறைகேடுகளை எதிர்த்ததற்காக அலுவலகத்திலேயே உயிரோடு எரித்து கொல்லப்பட்டிருப்பது, பெண்கள் பாதுகாப்பு மற்றும் பணியிடங்களில் நிலவும் அதிகார வன்முறையின் உச்சக் கொடூரத்தை வெளிப்படுத்துகிறது. பெண்கள் பணியிடங்களில் எதிர்கொள்ளும் அடக்குமுறைகள், பழிவாங்கல் நடவடிக்கைகள்,முறைகேடுகளை எதிர்க்கும் பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகியவற்றை இந்த சம்பவம் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. இது தனிநபர் குற்றத்தோடு இணைந்து அரசு அலுவலகங்களில் பெண்கள் எவ்வளவு பாதுகாப்பற்ற சூழலில் பணியாற்றுகின்றனர் என்பதை வெளிபடுத்துகிற சம்பவமாக அமைந்துள்ளது. இந்த கொடூரக் கொலையில் உயிரிழந்த கல்யாணி நம்பி அவர்களுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை  தெரிவித்துக் கொள்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பும் நியாயமும் வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கின் ஆரம்பத்தில் விபத்தாகத் தோன்றிய சம்பவத்தை ஆழமாக விசாரித்து, குறுகிய காலத்திலேயே உண்மையை வெளிக்கொண்டு வந்து, குற்றவாளியை கைது செய்த மதுரை காவல்துறையின் துரிதமான, பொறுப்பான விசாரணை நடவடிக்கைகளுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. உண்மையை மறைக்க முயன்ற சூழலில், காவல்துறையின் இந்த நடவடிக்கை, காவல்துறை  மீது மக்களின் நம்பிக்கையை உறுதி படுத்தி உள்ளது. 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.வழக்கு விசாரணை விரைவாக முடிக்கப்பட்டு, குற்றவாளிக்கு கடும் தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும். அரசு மற்றும் பொதுத்துறை அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் வலுப்படுத்தப்பட வேண்டும். முறைகேடுகளை வெளிப்படுத்தும் பெண்கள் பாதுகாக்கப்படுவதற்கான தெளிவான நடைமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். ஜி. பிரமிளா, தலைவர், அ.ராதிகா, பொதுச்செயலாளர்– அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA).

இணை ஆசிரியர் :N.சதீஷ்குமார் ,பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment