| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

மெட்ரோவில் இருக்கை ஒதுக்கீடு...! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! அதிகாரிகள் திடீர் ஆய்வு...!

by Vignesh Perumal on | 2026-01-19 05:36 PM

Share:


மெட்ரோவில் இருக்கை ஒதுக்கீடு...!  உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! அதிகாரிகள் திடீர் ஆய்வு...!

சென்னை மெட்ரோ ரயில்களில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு எனத் தனியாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், நடைமுறையில் அவை முறையாக அவர்களுக்குக் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மெட்ரோ நிர்வாகத்திற்குப் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. தலைமை நீதிபதி அமர்வு இந்த வழக்கை விசாரித்து வழங்கிய தீர்ப்பில், மெட்ரோ ரயில்களில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகளை மற்ற பயணிகள் ஆக்கிரமித்துள்ளனரா என்பதைத் தெரிந்துகொள்ள, மெட்ரோ நிர்வாகம் அவ்வப்போது திடீர் சோதனைகளை நடத்த வேண்டும். இந்த இருக்கை ஒதுக்கீட்டைச் செம்மையாக அமல்படுத்துவதற்கும், விதிமீறல்களைத் தடுப்பதற்கும் தேவையான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை 30 நாட்களுக்குள் மெட்ரோ நிர்வாகம் வகுக்க வேண்டும். இருக்கைகள் குறித்த விழிப்புணர்வைப் பயணிகளிடையே ஏற்படுத்துவதோடு, ஊழியர்கள் மூலம் அதை முறையாகக் கண்காணிக்க வேண்டும். வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது: "மெட்ரோ ரயில்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்கைகள் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு என ஒதுக்கப்பட்டாலும், பல நேரங்களில் உடல்நலமுள்ள இளைஞர்களே அந்த இருக்கைகளில் அமர்ந்து கொள்கின்றனர். இதனால் முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டிய அவலநிலை உள்ளது. மெட்ரோ ஊழியர்களும் இதைத் தட்டிக்கேட்பதில்லை." இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், மெட்ரோ நிர்வாகத்திடம் இது குறித்து விளக்கம் கேட்டிருந்தது. தற்போது மெட்ரோ நிர்வாகத்தின் தரப்பு விளக்கங்களைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மேற்கண்ட உத்தரவுகளைப் பிறப்பித்து இந்த வழக்கினை முடித்து வைத்தனர். நீதிமன்றத்தின் இந்த 30 நாள் காலக்கெடு மற்றும் திடீர் சோதனை உத்தரவு, மெட்ரோ பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இனிவரும் காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கைகளில் அமரும் பிற பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படுமா என்பது மெட்ரோ நிர்வாகம் வகுக்கப்போகும் புதிய நெறிமுறைகளில் தெரியவரும். ரயில்களில் இருக்கை ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளைத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடிக்கடி ஒலிபரப்ப வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment