by Muthukamatchi on | 2025-03-14 02:03 PM
அழகர்கோவிலில் மாசி தெப்பத்திருவிழா கோலாகலம்....!!! கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனமமதுரை மாவட்டத்தில், பிரசித்திபெற்ற அழகர்கோவில் ஶ்ரீகள்ளழகர் திருக்கோவிலில் மாசி தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மாசி மாதம் பவுர்ணமி நாளில் நடைபெறும் தெப்ப திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு மாசி மக தெப்பத்திருவிழா கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் மாலையில் திருக்கோவில் உறியடி மண்டபம் முன்பு கள்ளழகர் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி கஜேந்திர மோட்ச விழா நடைபெற்றது.தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் நேற்று காலையில் நடைபெற்றது. முன்னதாக, அழகர்மலை கோவிலில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் சப்பர பல்லக்கில் எழுந்தருளினார். மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் அருகில் உள்ள பொய்கைகரைப் பட்டியில் உள்ள தெப்பத்திற்கு புறப்பட்டார். வழி நெடுகிலும் நின்று பக்தர்களுக்கு சேவை சாதித்து, தெப்பத்தை சுற்றி வந்தார்.இந்த விழாவை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்திருந்தனர். அதன் பின்னர் கிழக்கு புறம் உள்ள மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். திருவிழா ஏற்பாடுகளை துணை ஆணையர் யக்ஞ நாராயணன், அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாஜலம் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். அப்பன்திருப்பதி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
செய்தி போட்டோ கூடலூர் ஆதவன் தேனி