by Vignesh Perumal on | 2025-03-12 07:24 PM
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் தாட்கோ சார்பாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மூன்று வருட முழு நேர பட்டப்படிப்பும் ஒன்றரை ஆண்டு முழு நேர உணவு தயாரிப்பு படிப்பும், மேலும் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினைஞர் ஆகிய படிப்புகள் சேர்ந்து பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
சென்னை தரமணியில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் அப்ளை நியூட்ரிசன் என்ற நிறுவனமானது ஐஎஸ்ஓ தரச் சான்று பெற்ற நிறுவனமாகும். இது ஒன்றிய அரசின் சுற்றுலா துறையின் கீழ் அமையப்பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம். மேலும் இந்நிறுவனம் சர்வதேச அமெரிக்கன் கவுன்சிலர் பிசினஸ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரான்ஸ் நாட்டில் உள்ள லெஸ்ஸி நிக்கோலஸ் அபார்ட் கேட்டரிங் நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட நிறுவனத்தில் பயில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று மொத்த மதிப்பெண்ணில் 45 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூபாய் மூன்று லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.
இப்படிப்பிற்கான முழு செலவினையும் தாட்கோவால் ஏற்கப்படுகிறது. இப்படிப்புகளை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் தங்களது திறமையின் அடிப்படையில் நட்சத்திர விடுதிகள், உயர்தர உணவகங்கள் விமானத்துறை கப்பல் துறை மற்றும் சேவை துறை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிய வழிவகை செய்யப்படும். மேலும், ஆரம்பகால மாத ஊதியமாக ரூபாய் 25 ஆயிரம் முதல் ரூபாய் 35 ஆயிரம் வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூபாய் 50,000 முதல் 70 ஆயிரம் வரை பதவி உயர்வின் அடிப்படையில் மாத ஊதியமாக பெறலாம்.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.